Home /News /tamil-nadu /

பொங்கல் பரிசு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல்..அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பொங்கல் பரிசு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல்..அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

Pongal gift: முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகவும், போலீஸ் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் 500 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறி, சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.  சுமார் 1,297 கோடி செலவில் 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    மனுவில்,  21 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருட்களே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தரம் குறைந்த மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி மற்றும் ஊசி போன்ற அபாயகரமான பொருட்கள் இருந்தது குறித்தும், பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது குறித்தும் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில், விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்காமல், 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் மதுபானக் கடை: கிராம சபைகளுக்கு அதிகாரம் கோரி மனு


    இந்த முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகவும், போலீஸ் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். மேற்கொண்டு பொங்கல் பரிசு வழங்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    மேலும் படிங்க: நகராட்சி தலைவர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கி வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு

    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, Chennai High court, Pongal Gift, Tamilnadu government

    அடுத்த செய்தி