முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகி மனு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் நிலையத்தில் அதிமுக நிர்வாகி மனு

அ.தி.மு.க அலுவலகம்

அ.தி.மு.க அலுவலகம்

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று காவல்நிலையத்தில் அ.தி.மு.க நிர்வாகி மனு அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஆதரவாளர்கள் நேற்று இரவு 12 மணி வரை ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பலராமன், தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதேபோன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார். சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராமனுக்கு-பரதன், ஜெயலலிதாவிற்கு-ஓபிஎஸ் - தலைமையேற்க கோரும் போஸ்டரால் பரபரப்பு

அதனால், அ.தி.மு.கவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அ.தி.மு.கவினரே இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபடும் வாய்ப்பும் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, அக்கட்சியின் பகுதி செயலாளர் பாலசந்திரன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

அதில், இன்று பிற்பகலில் வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தங்களது கட்சி நிர்வாகிகள் மற்றும் அவர்களின் காரின் மீது கல்வீசி தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தலைமைக் கழக நிர்வாகிகளை ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: ADMK