அரசு வேலை வாங்கித் தருவதாக தொடரப்பட்ட பணம் மோசடி வழக்கில் முன்னாள்
அதிமுக அமைச்சர் சரோஜாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சரான சரோஜா. இவருடைய நெருங்கிய உறவினரும், அவரிடம் முன்பு உதவியாளராகவும் பணியாற்றி வந்தவர் குணசீலன் (68). இவர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வசித்து வந்தார்.
சரோஜா, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரத்தில் போட்டியிட்டபோது, வேட்புமனுவில் குணசீலனின் வீட்டு முகவரியைத்தான் பதிவு செய்திருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது 15 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக குணசீலன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் அளித்து இருந்தார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சரோஜா மீதும் அவருடைய கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை.. பொதுமக்கள் அவதி
நாமக்கல் நீதிமன்றத்திலும் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்திலும் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதையடுத்து சரோஜா தரப்பில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சரோஜா மீதும், அவருடைய கணவர் மீதும் மோசடி புகார் கூறிய குணசீலனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஜன. 26ல் காலையில் உயிரிழந்தார்.
குணசீலன், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா இன்று சரண் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து, மறு உத்தரவு வரும்வரை, நாமக்கல் குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்னாள் அமைச்சர் சரோஜா, கணவர் லோகரஜ்சன் ஆகியோரிடம் டெபாசிட் தொகை ரூ.25 லட்சம் பெற்றுக்கொண்டு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரெகினா பேகம் ஜாமின் வழங்கினார்.
செய்தியாளர் - சுரேஷ்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.