சென்னை ராயப்பேட்டையில் உள்ள
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடன் வந்த நபரை
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரா என கேட்டு அங்கிருந்தோர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை எப்படி நடத்துவது என்பது பற்றியான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய பலரும் ஒற்றை தலைமை என்ற கருத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்களின் விருப்பம் என கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை புரிந்தார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைத்தியலிங்கம் திண்டுக்கல் சீனிவாசன் போன்றோரும் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
இதையும் படிங்க: உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக அலுவலகம்.. எடப்பாடி பழனிசாமி இல்லாமல் பொதுக்குழு தீர்மானக் கூட்டம்
ஜெயக்குமார் வந்தபோது சிலர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். ஜெயக்குமார் உள்ளே சென்றதையடுத்து அவருடன் வந்தவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட தொடங்கியது. ரத்த காயத்துக்கு உள்ளான நபர், பெரம்பூர் முன்னாள் செயலாளர் மாரிமுத்து என்பதும் அவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.
தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாரிமுத்து. ஜெயக்குமார் உடன் வந்தபோது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரா என கேட்டு தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் வெளிஆட்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.