விழுப்புரத்தில் அதிமுக கட்சியின் மகளிர் அணி, இளைஞர் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் கூறியதாவது, நடிகை, நடிகர் என்று யார் வந்தாலும் கூட்டம் கூடும். ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் எல்லோரும் நமக்கே வாக்கு அளிப்பார்கள் எனக் கூற முடியுமா? எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி. தற்போது அரசியலுக்கு வரும் அனைவரும் தன்னை எம்ஜிஆர் எனக் கூறிக் கொள்கிறார்கள். மக்களை முட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்குள்ள இளைஞர்களை ஏமாற்ற முடியாது” என்றார்.
மேலும் கூறுகையில், சினிமாவைப் போல இப்போதும் யாரோ எழுதிக் கொடுப்பதைத் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி சுய சிந்தனை இல்லாதவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை மாற்றப் போகிறேன் எனச் சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது என ரஜினியை சூசகமாக சாடினார். தமிழ்நாட்டின் வாழ்வாதாரச் பிரச்னைகள் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா, அது தொடர்பாக ஏதேனும் கருத்து சொல்லி இருக்கிறார்களா, போராட்டம் நடத்தி இருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார்.
Also read: ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு பறந்த ரஜினிகாந்த் - அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது எப்படி?
தற்போது நாட்டை காப்பாற்றப் போவதாகச் சொல்பவர்கள் கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு என்ன உதவி செய்தார்கள். இளைஞர்கள் ஏமாறி விடக்கூடாது. தமிழகத்தில் 50 ஆண்டுகாலம் திமுக, அதிமுக கட்டிக்காத்து வந்த சமூகநீதியைக் குலைப்பதற்கு அவர்களுக்கு ஒரு முகம் தேவை, தமிழகத்தில் சமூகநீதியை ஒழிக்க வேண்டுமென்றால் திமுகவையும் அதிமுகவையும் ஒழிக்க வேண்டும் என சிலர் ரஜினியின் மூலம் திட்டம் தீட்டி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
அடுத்து வரும் மே மாதத்தில் தேர்தல் முடிவுற்றிருக்கும், ஜூன் மூன்றாம் தேதிக்குள் புதிய அரசாங்கம் பதவி ஏற்கும். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அரசு இருக்காது என பேசினார்கள் தற்போது சிறந்த நிர்வாகத்திற்கு முதல் மாநிலம் என தமிழக அரசு பெயர் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் மிகப் பெரிய பங்காற்றப்போவது சமூக வலைதளங்கள்தாம். 7.5% இட ஒதுக்கீடு என்பது புரட்சிகரமான திட்டம். நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் வெறும் 6 பேர் மட்டுமே சேர்ந்தனர். ஆனால் நீட் தேர்வு இல்லாதபொழுது 30 மாணவர்களே சேர்ந்திருந்தனர். தற்போது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 409 மாணவர்கள் இன்றைக்கு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.