தமிழக சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத் தேர்தலுடன் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்ட தேர்தல் ஆணையம், 2021ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களைத் தயார் செய்வது, கூடுதல் வாக்குச்சாவடிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது கொரோனா தொற்று இருப்பதால், அதற்கேற்ப கூடுதலாக வாக்குச்சாவடிகளை உருவாக்குவது பற்றியும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு சென்னை வந்தது. விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரவேற்றார்.
பின்னர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எப்போது நடத்துவது என்றும், எத்தனை கட்டங்களாக நடத்தலாம் என்றும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக சட்டமன்ற தேர்தலை ஏப்ரலில் மூன்று அல்லது நான்காவது வாரத்தில் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என முறையிட்டிருப்பதாக தெரிவித்தார். திமுக சார்பிலும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமையன்று, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், உளவுப்பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.