ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசியலைவிட்டு விலகத் தயாரா? சீறும் ஓ.பி.எஸ்- அ.தி.மு.கவின் ஒற்றைமுகமாக இபிஎஸ்ஸால் மாற முடியாதது ஏன்?

அரசியலைவிட்டு விலகத் தயாரா? சீறும் ஓ.பி.எஸ்- அ.தி.மு.கவின் ஒற்றைமுகமாக இபிஎஸ்ஸால் மாற முடியாதது ஏன்?

மாதிரி படம்

மாதிரி படம்

மு.க.ஸ்டாலினும், நானும் சந்தித்து பேசிய குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலிலிருந்து விலகுவாரா? என்று ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் 5 மாத காலமாக நீடித்துவருகிறது. அ.தி.மு.க சார்பில் இரண்டு முறை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, இரண்டாவது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறை நடைபெற்ற பொதுக் குழுவுக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அதில், மேல்முறையீட்டில் இரண்டாவது நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக செயல்பட்டுவருகிறார். இருப்பினும், இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் முற்றிலும் கட்சியிலிருந்து ஓரம் கட்ட எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்கட்சித் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் செயல்பட்டுவருகின்றனர். தற்போது, அ.தி.மு.கவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பிறகு, ஆர்.பி.உதயகுமாரை துணை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் முறையிடப்பட்டது.

இந்த பரபரப்பான சூழலில் தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான 2வது கூட்டத் தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல்நாள் நிகழ்வில் மறைந்த எம்.எல்.ஏக்கள், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தனிப்பட்ட பாதுகாவலர்களுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஓ.பன்னீர் செல்வம் துணை எதிர்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்றுவிட்டு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஜனநாயக கடமையை ஆற்ற சட்டப்பேரவைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், துணை எதிர்கட்சித் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்தார். மாறாக முதல்நாள் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.

அதனையடுத்து, இரண்டாம் நாள் கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவி குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர். சபாநாயகரின் முடிவுக்கு எதிராக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். அதனையடுத்து, சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுகிறார்’ என்று குற்றம்சாட்டினர்.

அதனைத் தொடர்ந்து, தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதியளிக்காத நிலையில் தடையை மீறி அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ஓ.பன்னீர் செல்வத்தைக் கொண்டு அ.தி.மு.கவை அழிக்க மு.க.ஸ்டாலின் சதி செய்கிறார். ஓ.பன்னீர் செல்வமும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் சட்டப்பேரவையில் அரைமணி நேரம் சந்தித்து பேசினர்’ என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். பொதுவாக எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை அமைதியாக கடந்து செல்லும் ஓ.பன்னீர் செல்வம் இந்தமுறை காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், ‘முதல்வரும் நானும் சந்தித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால் நான் அரசியலிலிருந்து விலகத் தயார். நிரூபிக்க முடியாவிட்டால் அவர் அரசியலிலிருந்து விலகத் தயாரா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஊர்ந்து, ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார் என்பது உலகுக்கே தெரியும்’ என்றும் காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பின் குற்றச்சாட்டுகளை தி.மு.க தரப்பில் கண்டுகொள்ளவில்லை. அ.தி.மு.கவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்று உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கப் பெற்றாலும், எடப்பாடி பழனிசாமியால் அக்கட்சியின் ஒற்றைமுகமாக மாறமுடியவில்லை. பா.ஜ.க தரப்புக்கு எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக ஏற்க விருப்பமில்லை என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்தின் கட்சிப் பதவிகளைத் தாண்டி, அரசுப் பதவியையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் விருப்பமாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக அ.தி.மு.க என்றால் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்றால் அ.தி.மு.க என்ற நிலையை அடைந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பதை அண்மைகால நிகழ்வுகளே அவருக்கு உணர்த்தியிருக்கும்.

உதாரணமாக தேவர் ஜெயந்தி தங்க கவசம் விவகாரம், எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம் போன்ற சிறிய முடிவுகளுக்கே அவர் பெரிய முயற்சிகளைச் செய்யவேண்டியுள்ளது. இந்தச்சூழலில் தேர்தல் நெருங்கி கூட்டணி அமைக்க வேண்டிய சூழல் வரும்போது கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை வலியுறுத்தினால் அதனை ஒரேயடியாக எளிதாக நிராகரிக்க எடப்பாடி பழனிசாமியால் முடியுமா என்பது தெரியவில்லை. குறிப்பாக, பா.ஜ.க விருப்பம் ஒன்றிணைந்த அ.தி.மு.க என்றால் அந்த விருப்பத்தை எடப்பாடியால் அத்தனை எளிதில் நிராகரித்துவிட முடியாது. அ.தி.மு.கவின் ஒற்றை முகமாக இருக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் விருப்பம். ஆனால், அவருடைய விருப்பத்தினால் மட்டும் அது  நடந்துவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Published by:Archana R
First published:

Tags: ADMK