டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்.
பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை இந்தியில் சேர்த்தால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படாது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல.
அமைச்சரவையின் 70 சதவீத செயல் திட்டங்கள் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது. 9-ம் வகுப்பு வரையில் இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோன்று இந்தி மொழிப் பயிற்சி, தேர்வுகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். 8 வடகிழக்கு மாநிலங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்க 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து 8 வடகிழக்கு மாநிலங்களில், 10-ம் வகுப்பு வரையிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
அமித் ஷாவின் பேச்சு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இந்தநிலையில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘மத்திய அமைச்சரவைக்கான எழுபது விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது என்றும், மற்ற மொழிகளைப் பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேச வேண்டுமென்றும், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில் உள்துறை அமைச்சர் பேசியிருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியவாறு, இந்தி மொழி தேவையெனும் பட்சத்தில் மனமுவந்து கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தி மொழி தேவை என்கிறபட்சத்தில் இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா கூறி இருக்கிறார்கள். நீண்ட நாள்களாக தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இன்றுவரை இந்தியாவில ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூலம் காரணம் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா இருமொழிக் கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக இருக்கிறது என்பதையும் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அ.தி.மு.க நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.