Home /News /tamil-nadu /

கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்த ஜெயக்குமாரை கைது செய்வதா...? ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்த ஜெயக்குமாரை கைது செய்வதா...? ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

ஓபிஎஸ்-இபிஎஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்

தி.மு.கவின் சலசலப்புகளுக்கு அ.தி.மு.க அஞ்சாது என்று ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவின் அராஜகத்தையும், வன்முறை வெளியாட்டத்தையும் ஜனநாயகப் படுகொலையையும் தட்டிக்கேட்ட கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரைக் காவல்துறை திடீரென்று கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    ஜெயக்குமார் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற மனப்பான்மையோடு, கள்ள ஓட்டு போடவந்த தி.மு.கவினரை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இது எந்த வகையில் முறைகேடான செயல்? பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், அரசியலில் மிக மூத்த உறுப்பினராகவும் விளங்குகின்ற ஜெயக்குமார் கள்ள ஓட்டு போடுவதை தடுப்பதற்குண்டான முயற்சியை எடுத்தார்.

    ஒரு இடத்தில் சட்ட விரோத செயலிலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலிலோ ஈடுபடுகின்ற ஒரு நபரை பிடித்து, அவர் தப்பி ஓடிவிடாதபடி கை கால்களைக் கட்டி காவல்துறையிடம் ஒப்படைப்பதை, தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்களில் இதற்கு முன் எத்தனையோ முறைகள் நடைபெற்றதை நாம் பார்த்திருக்கிறோம்.

    அதைப் போலவே, கள்ள ஓட்டு போட வந்த ஒருவரை கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்க அங்கிருந்தவர்கள் முயற்சித்தபோது, அந்த நபரை அடிக்க வேண்டாம் என்று சொல்லி காப்பாற்றி, காவல்துறையிடம் ஒப்படையுங்கள் என்று பொறுப்புடன் செயல்பட்டிருக்கும் ஜெயக்குமார் செய்தது நியாயம்தான் என்பதை தமிழ்நாட்டில் எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள்.

    உள்ளாட்சித் தேர்தல் என்றாலே அது, தி.மு.கவினரின் முறைகேடும், கள்ள ஓட்டும் அராஜகமும், அடாவடியும் நிறைந்த ஒன்று என்ற மனநிலை மக்களுக்கு ஏற்பட்டு மிகக்குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதை மூடி மறைக்கவும், இந்தத் தேர்தல் மூலமாக தங்களுக்கு அங்கீகாரம் வந்துவிடும் என்று நம்பிக்கொண்டு அதற்கேற்ற வகையில் முடிவகளை மாற்றி அறிவிக்க தி.மு.க முயற்சிப்பதன் வெளிப்பாடாகவே ஜெயக்குமாரை சட்டவிரோதமாக காவல்துறையினரைக் கொண்டு தி.மு.க அரசு கைது செய்திருக்கின்றது என்று குற்றம்சாட்டுகிறோம்.

    2006-ம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் நிகழ்ந்த ஜனநாயகப் படுகொலையை சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி கண்டித்து, மறுதேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டதை மக்கள் மறந்துவிடவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட தி.மு.க தனது ஜனநாயக விரோதச் செயல்களை கைவிடாதிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தி.மு.கவின் இந்த அராஜகச் செயல்களையும் முறைகேடாக அ.தி.மு.க மீது மேற்கொள்ளும் தாக்குதல்களையும் சட்டத்தின் துணை கொண்டு கழகம் எதிர்த்து நிற்கும். முறியடிக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

    தி.மு.க நிர்வாகியை அரைநிர்வாணமாக அழைத்துச் சென்ற விவகாரம்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

    நாளை நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது தி.மு.கவினர் காவல்துறை உதவியுடன் எந்த அளவிற்கு ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவார்கள் என்பதற்கு முன்னோட்டமாக ஜெயக்குமார் கைது அமைந்திருக்கிறது. இந்த சலசலப்புகளைக் கொண்டு அ.தி.மு.க அஞ்சாது. ஆகவே, நாளை வாக்கு எண்ணிக்கையின்போது கழக உடன்பிறப்புகள் விழுப்புடன் இருந்து, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Edappadi Palaniswami, Jayakumar, O Panneerselvam

    அடுத்த செய்தி