ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கக் கூடாது - மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர் செல்வம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தைக் கலைக்கக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பதாக இன்றைய நாளிதழில் செய்தி வெளிவந்துள்ளதைப் பார்க்கும்போது ‘அழிப்பது சுலம் ஆக்குவது கடினம்’ என்ற பழமொழிதான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

  அரசின் நலத் திட்ட உதவிகள் மக்களை விரைந்து சென்றடைய வேண்டும், மக்களின் அடிப்படைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும், காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்துதான் புதிய மாவட்டங்கள், புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள், புதிய கோட்டாட்சியர் அலுவலகங்கள், புதிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

  இந்த அடிப்படையில், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிவதைக் கருத்திக்கொண்டு, மாணவ மாணவியரின் நலனைக் காக்கும் வகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. இந்த வாரியத்தின்மூலம் லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கான வேலைவாய்ப்பும் எளிதாகவும், விரைவாகவும் கிடைத்து வந்தது. இதுமட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுவருகிறது.

  இதேபோன்று, மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீங்குவதாலோ ஏற்படும் காலியிடங்கள் மற்றும் புதியதாகத் தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் ஆகியவை உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதைக் கருத்திக் கொண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக, மருத்துவத்துறை பணியாளர்களை தேர்வு செய்வதற்கென்று மருத்துவத்துறை பணியாளர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது. அதன்காரணமாக, மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் விரைந்து நிரப்பப்பட்டுவருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தச் சூழ்நிலையில், கட்டமைப்பு இல்லாமை, பணியாளர்கள் இல்லாமை, நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் இல்லாமை, வெளிப்படைத் தன்மை இல்லாமை, நிதிச்சுமை ஆகியவற்றை காரணம் காட்டி, ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு அதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைப்பது என்பது காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதை காலதாமதாக்கும் செயலாகும். லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கும்போது அங்கும் பணியாளர் பற்றாக்குறை, கட்டமைப்பின்மை போன்ற பிரச்னைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிரியர் தேர்வு வாரியம் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது என்பதற்காகவே கலைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

  எனவே, முதலமைச்சர் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏதாவது பிரச்னைகள் இருந்தால், அவற்றை முற்றிலும் போக்கி, வாரியம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: