ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு

ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலுர், திருப்பத்தூர், ராணிபேட்டை,விழுப்புரம், கள்ளங்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த 13 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து  எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாநிலம் முழுவதும் அல்லாமல் 9 மாவட்டங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுவதால் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த காரணமும் இல்லை எனவும், சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்துவது கள்ள ஒட்டு போடுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

Also Read : பெரியார் குறித்து அவதூறு நோட்டீஸ்... பாரத் சேனா அமைப்பை சேர்ந்த இருவர் கைது

உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்ற நோக்கில் ஆளும் கட்சி ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், கொரோனா விதிகளை அமல்படுத்த வலியுறுத்தியும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14 ம் தேதி  தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 2006 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தற்போது 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதால் மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதால், எதிர்கட்சி தலைவரின் கோரிக்கை மனுவை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலிக்குமாறும், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: ADMK, Local Body Election 2021