Home /News /tamil-nadu /

இபிஎஸ் எடப்பாடி தொகுதியிலும், ஓபிஎஸ் போடியிலும் போட்டியிட விருப்ப மனு

இபிஎஸ் எடப்பாடி தொகுதியிலும், ஓபிஎஸ் போடியிலும் போட்டியிட விருப்ப மனு

Youtube Video

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.

    ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் சிலைக்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து சட்ட மன்ற தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனு விநியோகத்தை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடங்கி வைத்தனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர். முதலமைச்சர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடியிலும் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

    ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 கிலோ எடையுடைய கேக் வெட்டப்பட்டது. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டினர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிக்கு ஓ.பி.எஸ் கேக் ஊட்டினார்.

    அதன்பிறகு சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தையும், அறிவுசார் பூங்காவையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    மேலும் படிக்க... கருவாட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள்... காரணம் என்ன?

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்றத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 73 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.




    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cm edappadi palanisamy, OPS

    அடுத்த செய்தி