மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து அமைதி ஊர்வலம் சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதலமைச்சராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 5-ம் தேதி இரவு காலமானார். இவரது இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காலை 10:30 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் இருந்து அதிமுகவின் அமைதி ஊர்வலம் தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுகவினர் இதில் கலந்துகொண்டனர். தங்களது துக்கத்தின் வெளிப்பாடாக அவர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். ஊர்வலத்தில் பெண்கள் கருப்பு புடவை அணிந்து பங்கேற்றனர்.
கலைவாணர் அரங்கம், எழிலகம் வழியாகச் சென்ற இந்த அமைதி ஊர்வலம் இறுதியாக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை அடைந்தது. அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து கண்ணீர் மல்க மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதலமைச்சரும், அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், கீழே விழுந்து வணங்கினர்.
நினைவிடம் அருகே அமைக்கபட்டிருந்த மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியையும் ஆட்சியையும் தடம்பிரளாமல் காப்பாற்ற வேண்டுமென உறுதிமொழியை வாசிக்க, அதனை மற்றவர்கள் வழிமொழிந்து கூறினர். தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jayalalithaa