திருவாரூரில் அதிமுக பிரமுகர் தலை துண்டித்துக் கொலை

திருவாரூரில் அதிமுக பிரமுகர் தலை துண்டித்துக் கொலை... |

திருவாரூர் அருகே, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழிக்குப் பழியாக நடந்த கொலையா? அல்லது அரசியல் காரணமா?

 • Share this:
  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷை மர்ம நபர்கள் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். கொலை சம்பவத்தின் முழுப் பின்னணி என்ன?

  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கோவிலூரைச் சேர்ந்தவர் 35 வயதான ராஜேஷ். இவருக்கு திருமணமாகி பேபி என்ற மனைவியும் 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். 2020ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு ஆலங்காடு கோவிலூர் ஒன்றிய கவுன்சிலராக ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டார்.

  இந்த நிலையில் திங்கட்கிழமை காலை 8 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து முத்துப்பேட்டைக்கு ராஜேஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் முகத்திலேயே வெட்டியுள்ளனர்.

  பின்னர் அவரது தலையைத் துண்டித்து சாலையில் வீசியுள்ளனர். அவரது உடல் சாலையோரம் உள்ள புதரில் விழுந்தது. கொலையாளிகள் தப்பிச் சென்ற நிலையில், அந்த வழியாக சிறிதுநேரம் கழித்து சென்றவர்கள் தலை தனியாக சாலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து முத்துப்பேட்டை போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

  மேலும் படிக்க...பள்ளி மாணவர்களுக்குள் மோதல்: கண்மூடித்தனமாகத் தாக்கும் பரபரப்பு வீடியோ

  முத்துப்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை அகற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைச் சம்பவம் குறித்து அறிந்த ராஜேஷின் உறவினர்களும் ஆதரவாளர்களும் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் சடலத்தை வாங்கிக் கொள்வதாக உறவினர்கள் ஒப்புக் கொண்டனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த அமமுக பிரமுகர் மதன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜேஷ் தான் முதல் குற்றவாளி என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ராஜேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே அதிமுகவில் இணைந்துள்ளார்.

  அதனால் ராஜேஷ் பழிக்குப் பழி வாங்கும் விதத்தில் படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: