நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இது தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு இன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை
அதிமுக புறக்கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் 1-2-2022 அன்று சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.ஆளுநரில் இந்த செயல் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக நேற்று அறிவித்தது. இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அதிமுக தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 8ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பங்கேற்று நீட் விலக்கிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.