மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியுமான அன்வர்ராஜா, அவர் விரும்பியது அல்லது எதிர்பார்த்தது போலவே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர், ராஜ்யசபா முன்னாள் எம்பி, மாநில சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்திருந்தாலும் அதிமுகவில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டதால்தானோ என்னவோ உட்கட்சி விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்.
கட்சி விவகாரங்களைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது புதிதல்ல. எப்போது, பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைத்ததோ அப்போதில் இருந்தே இவரது பேச்சில் ஏதேனும் சிக்கல் இருக்கும். பாஜக உடனான கூட்டணியை பொதுவெளியில் தொடர்ச்சியாக விமர்சித்து வந்தவர்.
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது, சசிகலா பக்கம் நின்ற அன்வர் ராஜா, அவர் சிறை சென்ற பின், எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவுக் கரம் நீட்டினார். அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் வருகைக்குப் பின்னர், இரட்டைத் தலைமையை அவர் எப்போதும் விரும்பியதில்லை. இந்நிலையில்தான் கடந்த 24ம் தேதி, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்குவாதமும், சலசலப்பும் வரம்பை மீறிச் சென்றிருக்கிறது. அங்கு சர்ச்சைகளின் முக்கிய முகமாக இருந்தவர் அன்வர்ராஜா.
Also Read: அதிமுகவில் இருந்து அன்வர்ராஜா நீக்கம்: கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை என அறிவிப்பு
கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அன்வர் ராஜா ஒருமையில் பேசியதாக வெளியான ஆடியோவே அத்தனை அதிர்வலைகளுக்கும் காரணம். எனவேதான் முன்னாள் சட்ட அமைச்சர் சி வி சண்முகம், அன்வர் ராஜாவின் சட்டையைப் பிடிக்க பாய்ந்திருக்கிறார். அந்த ஆடியோவின் எதிர்முகாமில் பேசிய அமமுகவைச் சேர்ந்தவரிடம் நல்லவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை வெற்றிபெறவில்லை. அப்படி நிகழ்ந்திருந்தால் தன்னை ஒரு எம்ஜிஆராகவே நினைத்துக்கொண்டிருப்பார். யாரும் அவரை நெருங்கி இருக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். இதுஒருபுறமிருக்க, தன்னைத் தவிர தற்போது தலைமைப் பொறுப்பில் இருக்கும் எல்லோரும் சசிகலாவின் காலில் விழுந்தவர்கள்தானே என பொதுவெளியில் விமர்சித்தார். அப்படிப்பட்ட சசிகலாவை கட்சியில் மீண்டும் ஏன் சேர்க்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி அதிமுக தலைமையை அதிரச் செய்தார்.
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு, பின்னர் ஊடகங்களுக்கும், தினசரிகளுக்கும், யூ டியூப் சேனல்களுக்கும் அன்வர் ராஜா தானாக முன்வந்து பேட்டியளித்தற்குக் காரணம் அதிமுக தலைமை அவர்களாகவே கட்சியில் இருந்து தம்மை நீக்க வேண்டும் என்பதுதான். அது இப்போது நிகழ்ந்திருக்கிறது.
72 வயதாகும் அன்வர் ராஜாவுக்கு இனி என்ன எதிர்காலம் இருந்து விடப்போகிறது என்ற கேள்வி கேட்பவர்களுக்கு அடுத்து வரும் நகர்ப்புற தேர்தலில் குறைந்தபட்சம் நகராட்சி தலைவராவது ஆகி விட வேண்டும் என்று வியூகம் வகுத்து வருகிறாராம். அதற்கு பக்கபலமாக இருப்பவர் ஆளும் தரப்பின் அமைச்சர் ஒருவர் என்பது ஊரறிந்த ரகசியமாக உலவி வருகிறது. தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதால் அன்வர் ராஜாவின் இலக்கு எளிதாகி விடும். விரைவில் ஆளும் திமுகவில் ஐக்கியமாகிவிடுவதற்கான வேலைகள் வேகம் எடுக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Anwar raja, DMK, Edappadi palanisamy, O Panneerselvam, Politics, Sasikala, Tamil News, TamilNadu Politics, VK Sasikala