தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட
அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் மற்றும்
திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ் நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்வதற்கு 34 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. தற்போது, திமுக தலைமையிலான கூட்டணிக்கு 159 எம்எல்ஏ-க்கள் உள்ளதால், காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களில் 4 திமுகவுக்கு செல்கிறது. தி.மு.க சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க சார்பில் ஏற்கெனவே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.கவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் போட்டி நிலவியது வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் நிலவியது.
இந்தநிலையில் அ.தி.மு.க சார்பில் இரு உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் 10-6-2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக 19-5-2022 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கழக மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலனை செய்து எடுத்த முடிவின்படி, அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றியக் கழக செயலாளர் தர்மர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.