அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்பமனுக்களைப் பெறலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் மாநகராட்சிகள், நகராட்சிகள் , பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு பதிலாக தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். கடைசியாக தனி அதிகாரிகள் பதவிக் காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து தமிழக அரசு கடந்த ஜுலை மாதம் அறிவித்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இம்மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
முதற்கட்டமாக அதிமுக சார்பில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களிலுள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
மாநகராட்சி மேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர் மன்ற தலைவருக்கான விருப்ப மனு கட்டணம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.