ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அ.தி.மு.க தலைமை யார்? பொதுக்குழுக் கூட்டம் நடத்தும் அதிகாரம் யாருக்கு?- இடியாப்ப சிக்கலில் அ.தி.மு.க

அ.தி.மு.க தலைமை யார்? பொதுக்குழுக் கூட்டம் நடத்தும் அதிகாரம் யாருக்கு?- இடியாப்ப சிக்கலில் அ.தி.மு.க

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ தலைமை யார், பொதுக்குழுக் கூட்டம் நடத்தும் அதிகாரம் யாருக்கு என்பது உள்ளிட்ட இடியாப்ப சிக்கலில் அ.தி.மு.க மீண்டும் சிக்கியிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததிலிருந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதன் உச்சகட்ட காட்சியாக நேற்றைய பொதுக்குழுக் கூட்டம் நிகழ்வுகள் அமைந்தன. அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்க்கும் ஒரு பொதுக்குழு கூட்டமாக நேற்றைய கூட்டம் நடைபெற்றது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வமும், பெரும் வரவேற்புக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தந்தனர்.

பொதுக்குழுக் கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டிருந்த 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூலை 11ஆம் தேதி ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனால் அறிவிக்கப்பட்டது. இது அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவே டெல்லிக்கு புறப்பட்டார். பா.ஜ.க-வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரம் குறித்து டெல்லி செல்வதாக ஓ.பன்னீர் செல்வம் கூறினார். ஆனால், இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து பொதுக்குழு செயற்குழுவில் நடந்தவை குறித்து புகார் அளித்தார் என்னும் அந்த புகாரில், அதிமுக தலைமையை சட்ட விரோதமாக எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் புகார் தெரிவிக்கவில்லை என்று வைத்தியலிங்கம் விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், வளர்மதி, கே. பி அன்பழகன், கே.சி வீரமணி, வைகை செல்வன், பொள்ளாச்சி ஜெயராமன், தங்கமணி, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி அதிமுகவில் இப்போது இல்லை. 12.09.2017 அன்று செய்யப்பட்ட சட்டதிருத்தம் படி பதவி செல்லும் என ஓபிஎஸ் வாதம் செய்தால் என்றாலும் அது செல்லாது. அது இடைக்கால பதவி மட்டுமே. தேர்தல் அறிவித்தவுடன் அந்த பதவி காலாவதியாகிவிட்டது. நேற்றைய பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் பெறாததால் அந்த பதவிகள் விதிப்படி காலாவதியாகிவிட்டன. திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

ஆனால், ஓ.பன்னீர் செல்வத்தின் அனுமதியில்லாமல் பொதுக்குழுவை கூட்ட முடியாது என்று வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.

அ.தி.மு.கவில் உள்ள சட்டக் குழப்பங்கள்:

அ.தி.மு.க மீண்டும் சட்டக் குழப்பத்தில் சிக்கியுள்ளதாகவே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பொதுக்குழு என்பது உட்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்துவருகிறது. ஒருவேளை நேற்றைய பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி முழுமையாக நடைபெற்று அதில், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஒற்றைத் தலைமைத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் எந்த சட்டக்குழப்பமும் இருந்திருக்காது. ஆனால், நேற்றைய பொதுக்குழு சரிவர நடைபெறவில்லை. எனவே, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் நேற்றைய பொதுக்குழுவே செல்லாது என்கின்றனர்.

நேற்றைய பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்வுக்கும் ஒப்புதல் அளிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட இருந்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றால்தான் அந்த நிர்வாகிகளின் பதவிகள் செல்லும் என அ.தி.மு.க விதி வலியுறுத்துவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை அந்த தீர்மானம் பெறத் தவறியதால் தற்போது யார் யார் பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற குழப்பமும் இருப்பதாக கூறுகின்றனர்.

அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு காலாவதியாகிவிட்டது- சி.வி.சண்முகம்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கு இந்த பொதுக்குழுவில் ஒப்புதல் கிடைக்காததால் தற்போது கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று யாரும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறுகிறது.

ஆனால், 2017ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருடைய பதவிக் காலம் செப்டம்பர் வரை உள்ளது. எனவே, அவர்தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு விவரிக்கிறது. அதன்காரணமாக, தற்போது அ.தி.மு.கவின் தலைமைப் பதவியில் யார் இருக்கிறார் என்று அக்கட்சித் தொண்டர்களே குழம்பும் அளவுக்கும் வாதங்கள் நடைபெறுகின்றன.

எனவே, வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் அதிகாரம் அவைத் தலைவருக்கு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் அவர்களுக்கு சாதகமான வாதங்களை முன்வைத்து வரும் நிலையில் நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ தான் அதிகாரப்பூர்வ விடையைக் கொடுக்க முடியும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

இதற்கிடையில், தமிழ் மண்ணில் உரிமைகளைக் காத்திடவும் , எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெருமைகளைப் பேணி காத்திடவும் ஒரு புரட்சி பயணத்தைத் தொடங்குவதாக சசிகலாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam