Home /News /tamil-nadu /

டயர் பற்றாக்குறையால் தீபாவளிக்கு பேருந்து சேவை பாதிக்குமா? - கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கம்

டயர் பற்றாக்குறையால் தீபாவளிக்கு பேருந்து சேவை பாதிக்குமா? - கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கம்

அரசுப் பேருந்து

அரசுப் பேருந்து

அரசு போக்குவரத்துக் கழகங்களிடம், அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்கத் தேவையான டயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் தேவையான அளவு டயர்கள் இருப்பதால் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க முடியும் என்றும், பேருந்து டயர் பற்றாக்குறையால் சேவை பாதிக்கும் என்று வெளியாகி இருக்கும் தகவல் உண்மை இல்லை எனவும், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து தயானந்த் கட்டாரியா வெளியிட்ட செய்திக்குறிப்பில், போக்குவரத்துக் கழகங்களின் தீபாவளி சிறப்பு பஸ் சேவை டயர் பற்றாக்குறையால் பாதிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் உண்மை இல்லை. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் தீபாவளிக்கு தடையில்லா பேருந்து சேவைகளை முழுமையாக வழங்க சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி.) மற்றும் பிற போக்குவரத்துக் கழகங்களால் இயலாத நிலை ஏற்படும் என்று உண்மைநிலையை உறுதி செய்யாத செய்தி வெளியாகி உள்ளது.

    புதிய டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்களின் தற்போதைய இருப்பு நிலை, போக்குவரத்துக் கழகங்கள் அனைத்து பேருந்துகளையும் இயக்கத் தேவையான ‘டயர் புளோட்’டை விட அதிகமாக இருக்கிறது. எனவே தடையின்றி பேருந்துகளை இயக்க முடியும். 15 ஆயிரத்து 997 புதிய டயர்கள் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை வாங்கப்பட்டுள்ளன.

    மேலும் ஆயிரம் டயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த வாரம் சென்றடையும் நிலையில் உள்ளது. தற்போதைய நிலையில் எந்த தடங்கலும் இல்லாமல் தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் ஏதுவான நிலையில் இருப்பதை இது காட்டுகிறது. பழைய டயர்களை ரீட்ரெடிங் செய்ய டிரெட் ரப்பர், பிணைப்பு கோந்து, பிவிசி ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளன.

    Must Read : இரு மாநில மக்களின் நலனை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்- கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    அரசு போக்குவரத்துக் கழகங்களிடம் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்கத் தேவையான டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்கள், போதுமான அளவுக்கு இருப்பதால், தற்போதும், தீபாவளி பண்டிகையின்போதும் அனைத்து தட பேருந்துகளையும், சிறப்பு பேருந்துகளையும் சீராக இயக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Diwali, Govt Bus, Special buses

    அடுத்த செய்தி