உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், கருணாநிதி கண்ட பட்டினியில்லா தமிழ்நாட்டை உருவாக்கவும், முதல்வரின் ஆணைப்படி வருங்காலத்தில் 500 சமூதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்று அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மாதிரி சமூதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த டெல்லியில் இன்று மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவுத்துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உரையாற்றியதாவது, தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உளளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகிறது. தரமான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது.
இந்த உணவகங்களில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் பல்வகை சாதங்கள் (சாம்பார் கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன. 1.6.2021 முதல் 18.11.2021 வரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த உணவகங்கள் வழியாக பயன்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதேபோன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் "கலைஞர் உணவகம்" என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக செப்டம்பர் மாதம் வரை 2021-22ம் நிதியாண்டில் 3,227 மெட்ரிக் டன் அரிசியும் 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ. 3.5 இலட்சம் செலவிடப்படுகிறது.
இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் ஒன்றிய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் கீழ் 100 விழுக்காடு நிதி உதவி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.