ஆரணி அருகே கண்ணமங்கலம் அடுத்த பெரிய ஐயம்பாளையம் கிராமத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப் படுக்கைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் உள்ளது பெரிய ஐயம்பாளையம் கிராமம். இந்த கிராமத்திற்கு வடமேற்கில் சிறிய மலைமீது புகழ்பெற்ற, பழமையான ’ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயர்’ திருக்கோயில் அமைந்துள்ளது.
சிறிய குன்றுமீது கிழக்கு நோக்கிய கருவறையில் நின்ற கோலத்தில் மூலவர் பெருமாள் காட்சி தருகிறார். முன்னொரு காலத்தில் இறைவன் பெருமாள், அருகில் உள்ள சிறிய குகையில் தங்கியிருந்ததாகவும் அப்போது மலையில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த வாய்பேச முடியாத சிறுவன் ஒருவனை வாய்பேச வைத்ததாகவும், அன்றிலிருந்து இப்பெருமாளுக்கு ’ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயர்’ என்ற திருப்பெயர் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவரும் சென்னை - பெரும்பாக்கம் அரசுக் கல்லூரி தமிழ்த்துறை தலைவரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிஞர் இரா. பச்சியப்பன் அவர்கள், ’இத்திருக்கோயிலுக்கு அருகில் தெற்குத்திசையில் ஒரு பாறையும் அதன்கீழே ஒரு குகையும் இருக்கிறது.
இதை ’சாமியார் மலை’ என்போம். இதனுள் சென்று அமர்ந்தால் கோடைக்காலத்திலும் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். என்னுடைய இளமைக் காலத்தில் இந்த குகையில் அமர்ந்துதான் பெரும்பாலான இலக்கியப் புத்தகங்களை நான் வாசித்தேன்’ என்று கூறிய தகவலின் அடிப்படையில், ’சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளை’ செயலாளர் முனைவர் அ. அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் ஆர். விஜயன் ஆகியோர் 26.12.2021 அன்று களஆய்வு மேற்கொண்டபோது, அந்த குகையில் மூன்று சமணக் கற்பாழிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அத்துடன் அந்த குகைக்கு மேலே உள்ள பாறைமீதும் மூன்று சமணப் பாழிகள் வெட்டப்பட்டிருப்பதையும் அவர்கள் உறுதிசெய்தனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், பெரிய ஐயம்பாளையம் மலைக்கோயிலின் மேல் உள்ள மூலவரின் அறைக்கு தெற்கில் இருபெரிய பாறைகளின் நடுவில் இந்த சமணக்குகை அமைந்துள்ளது. குகையின் நுழைவிடம் ஒரு சிற்றாலயம் போன்ற தோற்றத்தைத் தருகிறது. நீளமான கருங்கல் சுவரும், நான்கு அடி உயரம் கொண்ட சிறிய வாயிலும் செதுக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
வாயிலின் உள்ளே சென்றால், ஒரு பம்பரத்தின் அடியைப் போல, கீழ்புறம் குறுகலாகவும், மேற்புறம் அகன்றும் உள்ள ஒரு பெரிய பாறையைக் காணலாம். இதன் தரைப்பரப்பில் வடக்கு நோக்கியவாறு மூன்று படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த சமணப்படுக்கைகள் சற்று ஆழமில்லாமல் செதுக்கப்பட்ட நிலையே அதன் பழமையை வெளிப்படுத்துகிறது.
குகையின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள சுவர் கனப்பரிமாணமும், அதன் வாயிலின் வெளிப்பகுதியில் காணும் இரு அனுமன் மற்றும் கருடாழ்வார் சிற்பங்களும், அதன் அருகில் தெளிவின்றி, தொடர்ச்சியற்று காணப்படும் கல்வெட்டுகளையும் வைத்துப்பார்க்கும்போது, இச்சுற்று சுவரானது கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதமுடிகிறது. ஆனால் குகையின் உள்ளே வெட்டப்பட்டுள்ள சமணப்படுக்கைகள் இதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகக் அறியமுடிகிறது.
Also read... நீட் பயிற்சி: அரசு பள்ளி மாணவர்களுக்கு உடனே வகுப்புகளை தொடங்க வேண்டும் - ராமதாஸ்!
சமணக்குகையின் வெளிப்புறமாகத் தரைதளத்தில் உள்ள பாறையில் மருந்து அரைக்கும் குழி ஒன்றும் உள்ளது. இக்குகையின் மேல்தளமாக உள்ள பாறைக்கு மேற்புறமாக மூன்று கற்படுக்கைகள் உள்ளன. இவை மெலிதான செதுக்கல்களைக் கொண்டுள்ளன. மொத்தமாக ஐயம்பாளையம் சமணர்குகையில் ஆறு படுக்கைகள் இருப்பது கண்டபிடிக்கப்பட்டுள்ளன.
Also read... புதுச்சேரிக்கும் பரவியது ஒமைக்ரான் - இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்!
திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சமணப்பாழியுடன் சேர்த்து மொத்தம் 12 சமணப்பாழிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் பெருமளவு சமணர் அடையாளங்கள் உள்ளன என்பது ஒரு சிறப்பாகும். அக்காலத்தில் சமணத்துறவிகளை மன்னர்கள் மதித்துவந்துள்ளதை ஐயம்பாளையம் போன்ற ஒரு சில பாழிகளின் மூலமாக உறுதிசெய்யமுடிகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சமணக்குகையின் கட்டிடச் சுவர்கள் தற்போது சிதைந்துள்ளது. எனவே, மாவட்ட நிருவாகம் இதனைச் சீரமைத்துப் பாதுகாக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
-செய்தியாளர்: ம.மோகன்ராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu