ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தினர் தாங்கள் போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்துமுடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்டனர்.
இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வெற்றியை பெற்றுள்ளனர். நேற்று மாலை வரை வார்டு உறுப்பினர்கள் 36 பேர் வெற்றி பெற்றிருந்தனர். 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மொத்தமாக 49 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.
தற்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 9 மாவட்டங்களில் இதுவரை 109 பேர் வார்டு உறுப்பினர்களாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களே தோல்வியை தழுவியுள்ள நிலையில், அரசியலில் முழுசாக ஈடுபடாமல் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளது அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: ‘ரூ.500 தராததால் யாருக்கும் வாக்கு கிடையாது’: வாக்குச் சீட்டில் எழுதிய வாக்காளர்!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.