சொகுசு கார்: நீதிபதி கருத்தால் நடிகர் விஜய் தரப்பு அப்செட்... மேல்முறையீடு செய்ய முடிவு

விஜய்

ரோல்ஸ்ராய்ஸ் கார் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் ஆட்சேபகரமான கருத்து தெரிவித்துள்ளதாகவும், அதனை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  உலகின் பிரம்மாண்ட சொகுசு கார்களில் முதன்மையானது ரோல்ஸ் ராய்ஸ் இதன் தற்போதைய இந்திய மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய். ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் கேட்கும் சொகுசு வசதிகளுக்கு ஏற்ப ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் தனித்தனி வசதிகளுடன் தயாரிக்கப்படுகின்றது. அந்த வகையில், ரோல்ஸ் ராய்ல்ஸ் கோஸ்ட் வகை காரை இங்கிலாந்திலிருந்து 2012 ஆம் ஆண்டு இறக்குமதி செய்துள்ளார் நடிகர் விஜய். வெளிநாட்டிலிருந்து யார் காரை இறக்குமதி செய்தாலும், இறக்குமதி வரியுடன், நுழைவு வரி செலுத்த வேண்டியது கட்டாயம்.

  இறக்குமதி செய்யப்பட்ட காரின் மதிப்பில் 20% நுழைவு வரியை வணிக வரித்துறையில் செலுத்தி, பதிவுக்கு உகந்தது என்று போக்குவரத்து துறை அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான், சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சொகுசு கார்களை அதிகாரிகள் பதிவு செய்து ஓட்ட அனுமதிப்பார்கள். சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை இறக்குமதி செய்த விஜய் நுழைவு வரியாக 80 லட்சம் ரூபாயை செலுத்தியிருக்க வேண்டும்.

  ஆனால், நுழைவு வரி செலுத்தாததால், காரை பதிவு செய்ய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதனால், வீட்டிலேயே தனது சொகுசு காரை விஜய் நிறுத்தி வைத்துள்ளார். வணிக வரித்துறை அதிகாரியின் ஆணையை எதிர்த்தும், நுழைவு வரி விலக்கு அளிக்க கோரியும் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 2012-ல் தொடரப்பட்ட இந்த வழக்கை நேற்றைக்கு முந்தைய தினம் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் யார் என்பதை கேட்டு தெரிந்துகொண்டார்.

  அதன்பின்னர்தான், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை என காட்டமாக தீர்ப்பளித்துள்ளார். தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

  இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டு விஜயின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதனை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக சமூக வலைதளங்களில் விவாதம் பரவியது. விஜய் வரி விலக்கு கேட்டது தவறு என்றும், விஜய் அவரது உரிமையைத் தான் கோரியுள்ளார் என்றும் விவாதங்கள் எழுந்தன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்தநிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக விஜய் தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ளது.

  இதுதொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜயின் வழக்கறிஞர் குமரேசன், ‘விஜய் வரிவிலக்கு உரிமைதான் கோரினார். அதில், வரி ஏய்ப்பு என்ற வாதத்துக்கு இடமில்லை. இந்த விவகாரம் வேறுவிதமான வாதங்கள் உருவாக்கியுள்ளன. நீதிபதியின் தீர்ப்பில் சில ஆட்சேபகரமான கருத்துகள் உள்ளன. அதனால், இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்யவுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: