நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு – பார்வதி ஆகியோர் சந்தித்த பிரச்னைகளையும், அவர்களுக்கு நீதி வாங்கித் தந்த அப்போதைய வழக்கறிஞர் சந்துருவையும் மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டிருந்தது. இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது
ஜெய் பீமில் பழங்குடி இளைஞனை அடித்தே கொலை செய்யும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் வீட்டில் இருக்கும் காட்சியில், வன்னியரின் அடையாளமான அக்கினி குண்டத்தின் புகைப்படம் பின்னணியில் இருக்கும். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சமுகத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு வன்முறை போலீஸ்காரர் வன்னியராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் எனக் கூறி ஜெய் பீம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், இதனையடுத்து அந்தக் காட்சியை நீக்கி விடுவதாக இயக்குனர் தரப்பு கூறியது.
இதற்கிடையில் பாமகவை சேர்ந்த இளைஞர்கள் நடிகர் சூர்யாவை மிரட்டும் விதமாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். திரைத்துறையினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சில அரசியல் கட்சியினரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ஜெய் பீம் சர்ச்சை குறித்து பாமகவை விமர்சித்துள்ளது.
நவம்பர் 16-ம் தேதி வெளியான முரசொலி நாளிதழில், ‘ஜெய் பீம் (சிங்) இது என்ன புதுக்குழப்பம்? என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் (ஜெய் பீம்’ சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த சர்ச்சையின் விளைவாக ஒரு புதிய படத் தயாரிப்பில் நடைபெற்ற கலாட்டா.. கற்பனை)
படத்தின் வில்லனின் வீடு… அது ஒரு பண்ணை பங்களா – காட்சி அமைப்பின்படி பண்ணையார் தனது கூட்டாளிகளுக்கு விருது அளிக்கிறார் படத்தின் இயக்குநர் தனது உதவியாளரை அழைக்கிறார்.
இயக்குநர்:- என்னய்யா… நான் சொன்னபடி எல்லாம் சரியாயிருக்கான்னு பார்த்திட்டியா… சுவத்துல ஏதாவது காலண்டரை மாட்டிவைத்து நாளைக்கு படத்துக்கு ஏதாவது தலைவலி உண்டாக்கிடாதே… என இயக்குநர் உதவியாளரிடம் சொல்லுவது போல் ஆரம்பிக்கிறது இந்த கட்டுரை.
இயக்குநர் . “லைட்ஸ் ஆன்”.. “ஸ்டார்ட் சவுண்ட..” “ஸ்டார்ட் காமரா.. கிளாப்,… ஆக்ஷன்.. என டேக் என்று போகும்போது கட் கட் என முட்டுக்கட்டை போடுவதாகவும் இயக்குநர் ஏன் என கேட்க, டேபிள்ல மாம்பழம் இருக்கு. அது ஒரு கட்சி சின்னம் சார். விருந்து வைக்கும் வில்லன் வீட்டுல மாம்பழம், வில்லனை எங்கள் கட்சிக்காரரா காட்டிட்டாங்கன்னு எதிர்ப்பு வரக்கூடாது சார். அதான் என்பார். கூடையில இருந்து பழத்த எடுத்துட்டு மீண்டும் இயக்குநர் டேக் போவார். காட்சிப்படி உணவு பரிமாறுபவர் பண்ணையாரை பார்த்து அய்யா.. சாம்பார் போடவா, காரக்குழம்பு போடவான்னு கேட்க உதவி இயக்குநர் கட் போடுவார்.
இயக்குநர் இப்ப என்னய்யா எனக் கேட்க, டயலாக்-ல தப்பு, உணவு பரிமாறுபவர் அய்யான்னு கூப்பிடுறாரு… அய்யான்னு தானே சொல்வாங்க., எனக் இயக்குநர் கேட்பதாகவும் அதற்கு உதவி இயக்குநர் இங்க ஒரு கட்சித் தலைவரை அவரோட கட்சிக்காரர்களெல்லாம் அய்யான்னுதான் சொல்வாங்க… அதனால வில்லன் கேரக்டரை அய்யான்னு அழைச்சு, அழைச்சு எங்கள் தலைவரை வில்லனாக்கி விட்டார்கள் எனப் போராட்டம் ஆரம்பிச்சுடுவாங்களேன்னுதான் சார் “கட்” சொன்னேன் என்பார்.
காட்சிப்படி ஒரு பெரியவர் பண்ணையாரை பார்த்து விருந்துக்கு தம்பி வரலையா? எனக் கேட்க பண்ணையார் அன்பு தம்பியையா கேட்கறீங்கன்னு சொன்னதும் அங்க ஒரு கட். இப்ப எதுக்குய்யா கட் என இயக்குநர் அலற. பண்ணையார் மகன் பெயர் மாத்த சொல்லி அப்பவே வசனகர்த்தாகிட்ட சொன்னேன் அவர் மற்ந்துட்டாரு.
பேரில என்னய்யா பிரச்னைன்னு இயக்குநர் கேட்க பிரச்னையே இங்கதான் சார் உருவாகும் அந்த பேர் வேண்டாம். எனக் கூறி இப்படி பிரச்னை மேல பிரச்னை போக ஒரு கட்டத்துல பேக்கப் பேக்கப் இயக்குநர் கத்துனாராம். மனைவி வந்து என்னங்க எதாவது கெட்ட கனவு கண்டீங்களான்னு உலுக்கி எழுப்பிச்சாம்.
ஓ ஒண்ணுமில்லே… ‘ஜெய் பீம்’ படத்தைப் பத்தி டி.வி.யிலே விவாதம் பார்த்தேன்… அப்படியே தூங்கிவிட்டேன். சாதி அரசியல் பிழைப்பு நடத்துவோர். இந்த நாட்டைப் படுத்தும் பாட்டுக்கு எப்போதுதான் விடிவு ஏற்படுமோ?
“சாதிப் பிரிவு செய்தோர்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி – சகியே
நீதிகள் சொன்னாரடி”
– புரட்சிக் கவிஞர்” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Surya, Anbumani ramadoss, DMK, Dr Ramadoss, Jai Bhim, Murasoli, PMK