ரூ.26 கோடி இரிடியம் மோசடி: பிரபல நடிகையின் மகன் கைது - சினிமா பிரபலங்களுக்கு தொடர்பு?

ரூ.26 கோடி இரிடியம் மோசடி: பிரபல நடிகையின் மகன் கைது - சினிமா பிரபலங்களுக்கு தொடர்பு?

அம்ரிஷ்

இடியும் மின்னலும் சேர்ந்து உருவான சக்தி வாய்ந்த இரிடியம் விற்பதாகக் கூறி, தொழிலதிபரிடம் 26 டி ரூபாய் பறித்த, நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்பரீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நெடுமாறன். அதிமுக பிரமுகரான இவர், படப்பிடிப்பு தளம் மற்றும் பங்களா கட்டி படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஜெயசித்ரா; இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்

  இவரது மகன் அம்பரீஷ், இசையமைப்பாளராக உள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்டசிவா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது தாயும் நடிகையுமான ஜெயசி்த்ரா இயக்கிய நானே என்னுள் இல்லை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 2013ம் ஆண்டு அம்பரீஷ் நடித்த திரைப்படத்திற்கு வீடு வாடகைக்கு கொடுத்த வகையில், தொழிலதிபர் நெடுமாறனிடம் அம்பரீஷ் அறிமுகமானார்

  நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்ட அம்பரீஷ், நெடுமாறனின் தெய்வ பக்தியைப் பயன்படுத்தி மோசடியை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளார். இடியும் மின்னலும் சேர்ந்ததால் உருவான அரிய வகையான ‘ஐஆர் 77’ ரக இரிடியம் பொதிந்துள்ள செம்பால் ஆன பாத்திரம் தன்னிடம் இருப்பதாகவும், அதை மலேசியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கத் தயாராக இருப்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்

  அந்த பாத்திரம், பெரம்பலூரில் 150 குடும்பங்களுக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோவிலில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த 150 குடும்பங்கள் மற்றும் மலேசியா கொண்டு செல்வதற்கான செலவு என மொத்தமாக 100 கோடி ரூபாய் கொடுத்தால், இரிடியம் பாத்திரத்தை விற்று இரண்டரை லட்சம் கோடியை தொழிலதிபர் பெறலாம் என்றும் நாடகமாடியுள்ளார்.

  அம்பரீஷிடம் இருப்பது இரிடியம் தானா என சந்தேகப்பட்டுள்ளார் நெடுமாறன். அதனால் அவரை நம்ப வைக்க அடுத்த கட்ட திட்டம் போட்டார் அம்பரீஷ் இங்கிலாந்தில் செயல்படும் எட்ஜ் எனப்படும் நிறுவனத்தில் இருந்து, விஞ்ஞானி என்ற பெயரில் நீக்ரோ ஒருவரை அழைத்து வந்துள்ளார் அம்பரீஷ். அந்தப் பாத்திரத்தை வைத்து அதைச் சுற்றி அரிசியைக் கொட்டி பாத்திரம் இழுப்பதை சோதித்துக் காண்பித்தார் அந்த விஞ்ஞானி

  இதையடுத்து, பெரம்பலூரில் இருந்து 150 நபர்கள் 2 பேருந்துகளில் வந்து நெடுமாறனைச் சந்தித்து, அந்த பாத்திரம் சக்தி வாய்ந்தது என்று கூறியுள்ளனர். தொடர்ந்து, நெடுமாறனை தனது சொந்த செலவில் மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார் அம்பரீஷ். அங்கு, குறிப்பிட்ட நிறுவனப் பிரதிநிதிகள் இரிடியத்தை இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வாங்கிக் கொள்வதாக நெடுமாறன் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

  அதைத்தொடர்ந்து அந்த நிறுவனம் அனுப்பி வைத்த பணம் ஆயிரம் கோடி ரூபாய் பணக்கட்டுகள், ஒரு கன்டெய்னர் லாரியில் வைக்கப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் வைத்து நெடுமாறனிடம் காண்பிக்கப்பட்டுள்ளது. கன்டெய்னர் லாரிக்குள் கண்ணாடிப் பெட்டிக்குள் கட்டுக்கட்டாக பணத்தைப் பார்த்த உடன் நெடுமாறன் நம்பி விட்டார். அதையடுத்து ரூ.100 கோடி தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். 60 கோடி ரூபாய், அல்லது 30 கோடி ரூபாயாவது கொடுக்கும்படி அம்பரீஷ் பேரம் பேசியுள்ளார்.பேரம் படிந்த பின், அம்பரீஷுக்கு 26 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் நெடுமாறன்

  அதில் சில கோடி ரூபாய்களை வங்கிக் கணக்கு மூலம் அனுப்பியுள்ளார்.பணம் கைமாறியவுடன், அம்பரீஷ் பெரம்பலூரில் இருந்து சொகுசுக் காரில் இரிடியம் பாத்திரத்தை எடுத்து வந்து நெடுமாறனிடம் கொடுத்துள்ளார். அதேநேரம், மலேசியாவில் இருந்து பாத்திரம் எப்போது வரும் என அடிக்கடி போன் செய்து அந்த நிறுவனத்தினர் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

  இதையெல்லாம் நம்பிய நெடுமாறன், அவசரம் அவசரமாக, அந்தப் பாத்திரத்தை பார்சலில் மலேசியாவிற்கு குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பியுள்ளார். அதன் பின் நீண்ட நாட்களாக மலேசிய நிறுவனத்திடம் இருந்து தகவல் மற்றும் பணம் எதுவும் வராததால் அதிர்ச்சி அடைந்தார். அம்பரீஷிடம் கேட்டபோது அவர் பல்வேறு விளக்கங்கள், பதில்களைச் சொல்லி மழுப்பியுள்ளார். இப்படி 5 ஆண்டுகளாக அம்பரீஷ் இழுத்தடித்த பிறகுதான், நெடுமாறனுக்குத் தான் ஏமாந்தது தெரியவந்தது. பெரம்பலுார் தொடங்கி மலேசியா வரை நடந்தது எல்லாம் அம்பரீஷின் செட்டப் நாடகம் என்பதும் அம்பலமானது

  இதையடுத்து 2018ம் ஆண்டு சென்னை காவல் ஆணையரகத்தில் அம்பரீஷ் மீது நெடுமாறன் மோசடி புகாரளித்தார். இதற்கிடையே, கொரோனா காலகட்டத்தி்ற்கு முன்பாக, நெடுமாறனை சந்தித்த அம்பரீஷ் அவரது காலில் விழுந்து தான் ஏமாற்றப்பட்டதாக மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், நெடுமாறன் தனது புகாரைத் திரும்பப் பெறாததால், மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்

  விசாரணையில் அம்பரீஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 26 கோடியே 20 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒப்புக் கொண்டார்.வ்போலீசார் அம்பரீஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்
  இந்த விவகாரத்தில் மேலும் சில சினிமா பிரபலங்கள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதால் நடிகரும் இசையமைப்பாளருமான அம்பரீஷை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

  முறையாக விசாரித்தால் இந்த மோசடியில் தொடர்புடைய சர்வதேச கும்பல் சிக்குவார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
  Published by:Sheik Hanifah
  First published: