"ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்” முகிலனை கைது செய்த இன்ஸ்பெக்டர் பேட்டி

”முகிலனின் புகைப்படத்தைப் பார்த்த நாங்கள் போலீசார் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரை பிடித்து வைத்து இருக்கிறோம் என்று உணர்ந்தோம்”

Lingam S Arunachalam | news18
Updated: July 7, 2019, 7:20 AM IST
முகிலன்
Lingam S Arunachalam | news18
Updated: July 7, 2019, 7:20 AM IST
காணாமல் போன சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், திருப்பதியில் நேற்று பிடிபட்ட நிலையில், அவரை கைது செய்த ரயில்வே இன்ஸ்பெக்டர் பேட்டியளித்துள்ளார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 4 மாதங்கள் ஆகிய நிலையில், அவரை கண்டுபிடிக்க நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், முகிலனை விரைவில் கண்டுபிடிப்போம் என்று கடந்த முறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் போலீசார் கூறியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ஆந்திர போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி ஒன்று வெளியானது.

ராஜமுந்திரிக்கு சென்ற முகிலனின் நண்பர் ஒருவர் முகிலனைப் பார்த்து தமிழக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதனை அடுத்து, முகிலனை நேற்றிரவு ஆந்திர போலீசார் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். முகிலன் காட்பாடிக்கு அழைத்து வரப்பட்டு அங்கு போலீசாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், முகிலனை கைது செய்த திருப்பதி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாத்தையா இது தொடர்பாக கூறுகையில், ”நேற்று காலை மன்னார்குடியில் இருந்து திருப்பதிக்கு வந்து கொண்டிருந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தாடியுடன் காணப்படும் நபர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என்று திருப்பதி ரயில்வே போலீசாருக்கு காலை மணி 10.40 க்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் முகிலன் இருந்த கம்பார்ட்மெண்டிற்கு சென்ற ரயில்வே போலீசார் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். போலீசாரை பார்த்ததும் ஆவேசம் அடைந்தவர் போல் காணப்பட்ட முகிலன் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம், ஸ்டெர்லைட் ஆலை ஆகியவற்றுக்கு எதிராக  தமிழில் கோஷம் எழுப்பியவாறு ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்தி ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தோம்.

ஆனால், எங்களுக்கு ஆந்திர சகோதரர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கோஷம் போட்டார். முகிலன் போட்ட கோஷத்தை புரிந்துகொள்ளமுடியாத நாங்கள் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கருதி ரயில்வே காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தோம்.

நாங்கள் கொடுத்த மதிய உணவை சாப்பிட்ட அவர் என்னுடைய ஊர் காட்பாடி என்று கூறினார். எனவே அவரை காட்பாடிக்கு ரயிலில் அனுப்பி வைக்க முடிவு செய்தோம். இந்த நிலையில் திருப்பதி ரயில்வே காவல் நிலையத்தில் முகிலன் இருப்பது பற்றிய தகவல் அறிந்த தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் எங்களை தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர்.

சற்று நேர குழப்பத்திற்கு பின் தமிழக சிபிசிஐடி போலீசார் அனுப்பி வைத்த முகிலனின் புகைப்படத்தைப் பார்த்த நாங்கள் போலீசார் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரை பிடித்து வைத்து இருக்கிறோம் என்று உணர்ந்தோம்.

இந்த நிலையில் தமிழக சிபிசிஐடி போலீசாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப முகிலனை ரயில்வே போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே ரயிலில் காட்பாடிக்கு அனுப்பிவைத்தோம். தமிழ் நாடு போலீசார் எங்களை தொடர்பு கொள்ளும் வரை அவரை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறினார்.

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...