திமுக உட்கட்சித் தேர்தலில் தவறு செய்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் பரவி விட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.
மதவாத, தேச விரோத சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்கும் விதமாக திராவிட மாடல் பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும் என்றும் திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுக தொண்டர்களின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய மு.க.ஸ்டாலின், தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றிட வேண்டும் என்றும் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார்.
வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை அடைய கவனத்தோடு செயல்பட வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
உட்கட்சி தேர்தலில் சில இடங்களில் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் செய்த தவறுகள் குறித்து முழுமையான அறிக்கை தன்னுடைய கவனத்திற்கு வந்திருப்பதாகவும்,
தலைமைக் கழக நிர்வாகிகளின் விசாரணைக்கு பிறகு, நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.