Home /News /tamil-nadu /

குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது.. இன்னும் 2 நாளில் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது.. இன்னும் 2 நாளில் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது என்றும் இன்னும் இரண்டு நாட்களில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி கோவில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு உயரம் குறைந்த கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள பனை பொருட்கள், கடல் சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ளதை விட அதிகளவில் அமைக்கப்படும்.

    குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது, இன்னும் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசுக்கு நெருங்க முடியாத இடமென்று எதுவுமில்லை.

    தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே, தற்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தவறு செய்திருந்தால், நிச்சயம் அவரும் விசாரணை செய்யப் படுவார் என்று அவர் கூறினார்.

    முன்னதாக, பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபால் சாமி கோயிலுக்குச் சொந்தமான 177 ஏக்கர் நிலத்தை குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்குப் பூங்கா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஏற்கெனவே புகார் எழுந்தது.

    இதனிடையே, 2013ஆம் ஆண்டு குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில், தங்களுடைய பூங்கா அமைந்துள்ள இடத்தில், 21 ஏக்கர் கோயில் நிலம் என்று கூறி, ஆக்கிரமித்த இடத்துக்கான குத்தகைத் தொகையை வழங்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    நீண்ட காலம் நிலுவையில் இருந்த இந்த வழக்கு, அக். 07ம் தேதி நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், குத்தகைக் காலம் 1998ஆம் ஆண்டே முடிவடைந்துவிட்ட நிலையில், குயின்ஸ் லேண்ட் தொடர்ந்து நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்திருந்ததாகவும், வருவாய்த் துறையினருக்கும், இந்து அறநிலையத் துறைக்குமிடையே உள்ள பிரச்சினையை, தங்களுக்குச் சாதகமாக குயின்ஸ் லேண்ட் நிறுவனம் பயன்படுத்திக் கொண்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .

    இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும் என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Minister Sekar Babu, News On Instagram

    அடுத்த செய்தி