தேசிய தலைமையிடம் இருந்து பதில்வரும் வரை...! ஸ்டாலினை புகழ்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை

தேசிய தலைமையிடம் இருந்து பதில்வரும் வரை...! ஸ்டாலினை புகழ்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை
பி.டி.அரசகுமார்
  • News18
  • Last Updated: December 2, 2019, 3:35 PM IST
  • Share this:
திமுக தலைவர் மு.க ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க, தேசிய தலைமையிடம் மாநில நிர்வாகிகள் பரிந்துரை செய்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் பா.ஜ.க துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ’முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. ஆட்சி அதிகாரம் ஜனநாயக முறைப்படி கிடைக்க வேண்டுமென காத்திருக்கிறார்.

காலம் கணியும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார்.  தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணையில் ஏறுவார். நாம் அதையெல்லாம் பார்க்க போகிறோம்’ என்று தெரிவித்தார்.


மேலும், திமுகவின் கரை வேட்டி கட்ட தயாராக இருப்பதாகவும் பேசியிருந்தார்.

அரசகுமாரின் பேச்சு தமிழக பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தமிழக பாஜக திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அரசகுமாரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பல நிர்வாகிகளும் அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு தமிழக பாஜக பரிந்துரை செய்துள்ளது.

தேசிய தலைமையிடம் இருந்து பதில் வரும் வரை, அரசகுமார் கட்சி நிகழ்ச்சிகளிலோ, டிவி விவாதங்களிலோ பங்கேற்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்