ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ்., தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தார். ஆந்திராவில் வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை முடித்த இவர் அதன்பின் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பும் அதன் பின் டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நுண் உயிரியல் பிரிவில் PHD முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ். பணியும் பதவி உயர்வும் : 1991 ஆம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் ஏ.எஸ்.பி.,யாக திருநெல்வேலியில் முதன் முதலில் பணியில் சேர்ந்தார். அதன்பின் திருச்சி மாநகரத்தின் காவல்துறை துணை ஆணையாளராகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் எஸ்.பி.,யாகவும் பணிபுரிந்தார். அதன் பின்னர், டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்று பின் திருநெல்வேலி, சென்னை தலைமையிடம், மதுரை சரகம் ஆகிய பகுதிகளில் டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அயலக பணிகளில் பணிபுரிந்துள்ளார். அதன்பின் காவல்துறை தலைவராக பதவி உயர்வு பெற்று மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் ஐ.ஜி.,யாக பணிபுரிந்தார்.கடந்த 2016 ஆம் ஆண்டு ஏ.டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று மாநில போக்குவரத்து திட்டமிடுதல் குழுவில் பணியமடுத்தப்பட்டார். பின் CBCID, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் பணிபுரிந்தார். அதன் பிறகு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக பணிபுரிந்த வேளையில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாகவே பணி தொடர்ந்தார்.
இவரின் சாதனைகளில் சில
கடந்த 2008-ம் ஆண்டு சிறந்த பணிக்கான ஜனாதிபதியின் காவல் பதக்கம், 2015-ம் ஆண்டு மெச்சத்தக்க பணிக்கான ஜனாதிபதியின் காவல் பதக்கம், 50 ம் வருட சுதந்திர தின பதக்கம், 2017-ம் ஆண்டு பொது சேவையில் சிறந்து விளங்கியதற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா பதக்கம், 2019-ம் ஆண்டு தமிழ்நாடு அத்தி வரதர் சிறப்பு சேவை பதக்கம் ஆகிய பதக்கங்கள் ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ்.க்கு வழங்கப்பட்டுள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி.,யாக நடப்பாண்டில்(2022) 259 சிலைகள் இவரால் பறிமுதல் செய்யப்பட்டு 45 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்த இந்தியாவின் தொன்மை வாய்ந்த 11 சிலைகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
பல நாடுகளில் இருக்கும் 62 சிலைகளை கண்டறிந்து அவற்றை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் வெளிநாடுகளில் உள்ள தமிழக புராதான சின்னங்கள் மற்றும் சிலைகளை மீட்டெடுப்பதற்காக தமிழக காவல்துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் இயக்குநராகவும் ஜெயந்தி முரளி ஐ.பி.எஸ் இருந்து வந்துள்ளார்.
காவல்துறையில் சாதனை செய்யும் காவலர்களுக்கு டிஜிட்டல் முறையில் பதக்கங்கள் மட்டும் டிஜிட்டல் முறையில் பாராட்டுக்கள் வழங்குவதை இந்தியாவிற்கே அறிமுகப்படுத்தியவர் டி.ஜி.பி ஜெயந்த் முரளி ஐபிஎஸ்.
காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இவர் எழுதிய கட்டுரைகள் பிரபல ஆங்கில நாளேடுகள் மற்றும் தமிழ் நாளேடுகளில் வெளி வந்துள்ளது. காவல்துறை புலன் விசாரணை குறித்த 42 Mondays, Future policing, Enkindling the Endorphins of Endurance உள்ளிட்ட மூன்று புத்தகங்கள் உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
தான் படித்த வேளாண்துறை பற்றியும், காவல்துறை பற்றியும் நேரடியாகவும் ஆனலைனிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கற்பித்தும் வருகிறார்.
காவல்துறையில் சிறந்த ஓவியராகவும், சிறந்த எழுத்தாளராகவும், சிறந்த உடற்பயிற்சி ஆலோசகராகவும் விளங்கும் ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ், பல்லாயிரக்கணக்கான காவலர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றார். இதுவரை 30க்கும் மேற்பட்ட முழு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ளார்.
இந்திய சாதனைப் புத்தகத்தில் அரை மாரத்தான் சாதனை மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் அரை மற்றும் முழு மாரத்தான் சாதனைகளையும் படைத்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்காக கடந்த 2018 அக்டோபர் மாதம் நடைபெற்ற மாரத்தானில் கலந்து கொண்டு அப்போதைய தமிழக ஆளுநர் முன்னிலையில் தனது உடல் உறுப்பு தானம் செய்ய தன்னை அர்ப்பணித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai