தேர்தலில் பிரசார உத்தி என்பது காலத்திற்கு ஏற்ப மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன. சமூக வலைதளங்கள் வாயிலாக இளம் வாக்காளர்களை கவர, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த, தலைவர்களை விளம்பரப்படுத்த இந்த அரசியல் வியூக நிபுணர்கள் தற்போது தவிர்க்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.
அந்தவகையில், அதிமுகவுக்கு பிரசார வியூகங்களை வகுக்க நியமிக்கப்பட்டிருப்பவர் சுணில். கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அடுத்து வர உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுகவை மீண்டும் அரியணையில் அமரச் செய்யும் முக்கிய பொறுப்பு சுனிலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் தரும் செய்தி என்னவென்றால், 2019 மக்களவை தேர்தலில் திமுகவுக்காக சுனில் பணியாற்றினார் என்பதுதான்.
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில், இந்த ஆட்சி நிலைக்காது என்றே பலரும் கருதினர். ஆனால், மூன்றாண்டுகள் கடந்து ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. கட்சியையும், ஆட்சியையும் தனது முழு கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கிறார்.
2019 மக்களவை தேர்தலில் 39 இடங்களில் ஒரு இடம் மட்டுமே அதிமுக வென்றாலும், ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், வாக்காளர்களை கவர மற்றும் தக்கவைத்துக் கொள்வதற்கான விரிவான திட்டத்தை வகுப்பதற்கு முதல்வருக்கு சுனில் ஏற்கனவே உதவத் தொடங்கி விட்டார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியை பூர்வீகமாக கொண்டவரான சுனில் கனுகோலு, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் உயர் கல்வி முடித்தவர், அங்கு சிறிது காலம் மேனேஜ்மெண்ட் கன்சல்டிங் பணியிலும் இருந்துள்ளார்.
இந்தியா திரும்பிய அவர், அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். குஜராத்தில் அசோசியேசன் ஆஃப் பில்லியன் மைண்ட்ஸ் நிறுவனத்திற்கு தலைமையேற்ற சுனில், 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய மோடிக்காக முக்கிய பணியாற்றினார்.
பின்னர், 2017-ம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கான வியூகங்களை வகுத்துக்கொடுத்தார். அதில் 100 சதவிகிதம் வெற்றியும் கண்டார். 2016 தேர்தலில் திமுகவுக்காக வியூகங்களை வகுத்த சுனில், நமக்கு நாமே என்ற பிரசார திட்டத்தை செயல்படுத்தினார்.
2019 மக்களவை தேர்தலிலும் திமுகவுக்காக சுனில் பணியாற்றிய நிலையில், அந்தத் தேர்தலில் திமுக அபார வெற்றி கண்டது. ஆனால், திடீரென திமுக தலைமை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் பக்கம் திரும்பியதால், விலகிய சுனில் பெங்களூருக்கு சென்றார்.
தேர்தல் உத்திகளை வகுப்பதில் இருந்து சிறிதுகாலம் விலகி இருக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர் ஒருவரிடம் சுனில் கூறியிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு, அரசின் கொள்கை மற்றும் பிரசார உத்திகளை வகுத்துக் கொடுக்க சுனிலிடம் அழுத்தம் கொடுத்துள்ளது.
திமுக வலுவாகவும், அதிமுக பலவீனமாக உள்ளதாகவும் பொதுவான கருத்து நிலவும் சூழலில், எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து சுனில் ஏற்கனவே தமிழகத்தின் அரசியல் நிலவரம், அரசின் கொள்கைகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அணியுடன் சுனில் கைகோர்த்துள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பையும், ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. அரசியல் வியூகங்களில் ஷார்ப் மூளையைக் கொண்ட சுனில், ’வாழ்வா... சாவா..’ யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அதிர்ஷ்டத்தை மாற்றுவாரா? என்பதை பார்க்க அமைதியாக காத்திருக்க வேண்டும்.
Also See:
மேலும் ஒரு துயரம்... சுஷாந்தின் மறைவால் அதிர்ச்சியில் உயிரிழந்த நெருங்கிய உறவினர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - மருத்துவ நிபுணர் குழு கூறியது என்ன...?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.