கவரிங் நகை திருட்டு: தங்க நகை என புகாரளித்த பெண் - காவல்துறையின் துரித நடவடிக்கையால் இளைஞருக்கு சிறை

நகை திருடியவர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்க நகை என நினைத்து கவரிங் நகை திருடிய இளைஞர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

 • Share this:
  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் தெருவில் புதன்கிழமை காலையில் நடைபயிற்சி சென்ற கிருஷ்ணவேணி என்பவரிடம் இளைஞர் நகையை பறித்திருக்கிறார். பதறிப்போன கிருஷ்ணவேணி காவல்நிலையத்தின் படியேறி தனது 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடன் திருடிச் சென்றுவிட்டான் என கண்ணீர் வடித்திருக்கிறார். உடனே தனிப்படை அமைத்து கை விலங்கோடு களம் இறங்கிய காவலர்கள் சிசிடிவி கேமரா பதிவுகளை ஓட விட்டு ஓடிப்போன திருடனை தேடியிருக்கிறார்கள். அதில் சில காட்சிகளை வைத்து அடையாளம் கண்ட அவர்கள் அலெக்ஸ் பிரேம் என்ற அந்த திருடனை பிடித்து தங்க சங்கிலி எங்கே என விசாரிக்க அவரோ ஆடிப்போயிருக்கிறார். தங்கம் என தான் பறித்தது சுத்தமான கவரிங் நகை என அவர் அழுது புலம்ப காவலர்கள் நம்பத் தயாராக இல்லை.

  வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் "கல்யாணச் செலவு ஒரு கோடியப்பே" என சொல்லும் மூதாட்டி போல புகார்தாரர் கிருஷ்ணவேணி "திருடு போனது 3 பவுனப்பே" என சொன்னது உண்மை என்றுதான் காவல்துறை நம்பியிருக்கிறது. அதனால், அலெக்ஸ் பிரேமை அழைத்துச் சென்று அவர் வீசி ஏறிந்ததாக கூறப்பட்ட நகையை கண்டெடுத்து சோதித்திருக்கிறார்கள். சோதனையில் அது கவரிங் நகை என்பது உறுதியாக காவலர்கள் கடுப்பாகி விட்டார்கள். ஏதாவது ஒரு தங்க நகையை போலீஸ் தந்துவிடும் என்ற ஆசையில் தங்க நகையை பறிகொடுத்ததாக கிருஷ்ணவேணி எச்சரித்துள்ளார். அவரை, காவலர்கள் எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். கைக்கு வந்தது கவரிங்கோடு போச்சு என்பதால் நம்மையும் விட்டுவிடுவார்கள் என நம்பியிருக்கிறார் அந்த திருடன் அலெக்ஸ் பிரேம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆனால், பறித்தது கவரிங் நகையாக இருந்தாலும், திருட்டு திருட்டுதான் என கூறிய காவலர்கள் நீதிபதி முன்பு அவரை ஆஜர் படுத்திவிட்டார்கள். நகை எதுவாக இருந்தாலும் திருடும் எண்ணத்தை குற்றமாக கருதிய நீதிபதி, திருடன் அலெக்சை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். 100 ரூபாய் கூட பெறாத கவரிங் நகையை திருடியதற்காக தற்போது அருப்புக்கோட்டை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அலெக்ஸ். நகை தங்கமாக இருந்தாலும் கவரிங்காக இருந்தாலும் காவல்துறையின் இந்த சிறப்பான செயல்பாடு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
  Published by:Karthick S
  First published: