குறைவான தொகுதிகள் கொடுத்தாலும் ஓகே தான்... இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் - ஏ.சி.சண்முகம்

குறைவான தொகுதிகள் கொடுத்தாலும் ஓகே தான்... இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் - ஏ.சி.சண்முகம்

ஏ.சி.சண்முகம் - புதிய நீதிக்கட்சி நிறுவனர்

இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிடுகிறது என ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதனையடுத்து, அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

  தி.மு.கவுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படவில்லை. அ.தி.மு.கவுடன் பா.ம.க நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதனையடுத்து, பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் வழங்குவதாக அ.தி.மு.க அறிவித்தது.

  இந்தநிலையில், இருதினங்களுக்கு முன்னர் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

  அதனையடுத்து, இன்று அமைச்சர் தங்கமணி இல்லத்தில் வைத்து தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. அந்த பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. தேமுதிக 23 தொகுதிகள் வரை அதிமுக கூட்டணியில் கேட்டு வருகின்றனர்.

  அ.தி.மு.க தரப்பிலிருந்து தே.மு.தி.கவிற்கு 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க இயலும் என தெரிவித்து வருகின்றனர். அதனால், அ.தி.மு.க, தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனர், ஏ.சி.சண்முகம் 6 தொகுதிகளைக் கேட்டதாகவும், குறைத்து கொடுத்தாலும் பரவாயில்லை இரட்டை இலை சின்னத்தில் எங்கள் கட்சி போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார்.

  கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், 4,77,199 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட கதிர் ஆனந்திடம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
  Published by:Sheik Hanifah
  First published: