முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் ஏசி இயந்திரத்தில் வாயு கசிந்து 3 பேர் மரணம்!

சென்னையில் ஏசி இயந்திரத்தில் வாயு கசிந்து 3 பேர் மரணம்!

சித்தரிப்புப் படம்

சித்தரிப்புப் படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை கோயம்பேடு அருகே இரவு நேரத்தில் படுக்கையறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் இருந்து வாயு கசிந்ததால், மூச்சுத் திணறி 8 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இரவு துாங்கினால் காலை விழிக்கலாம் என்ற நம்பிக்கையோடு இருப்பதுதான் மனித வாழ்க்கை. அதேநேரம் நேற்றிருந்தவர் இன்று இல்லை என்ற அனுபவத்தையும் இந்த உலகம் நிரூபித்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு சோக சம்பவம், சென்னையில் நடந்துள்ளது.

சென்னை கோயம்பேடு அருகே உள்ள மெட்டுக்குளம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்தவர் சரவணன், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கலையரசி தனியார் கிளினிக்கில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்களது 8 வயது மகன் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை இரவு வீட்டில் துாங்கிய இவர்கள், செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டனர். ஏசி இயந்திரத்தில் இருந்து கசிந்த வாயு, இவர்களின் உயிரைக் குடித்துள்ளது. எப்படி நடந்தது இந்த விபத்து?

திங்கட்கிழமை இரவு வழக்கம்போல், சரவணன், கலையரசி, அவர்களது மகன் கார்த்திகேயன் மூவரும் படுக்கை அறையில் துாங்கியுள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில், கோயம்பேடு நெடுஞ்சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது பூ மார்க்கெட்டிற்கு வந்த லாரி மோதியுள்ளது.

தகவல் அறிந்த மின்வாரியத்தினர் முன்னெச்சரிக்கையாக அந்தப் பகுதியில்  மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். மின்சாரம் போனதால், சரவணன் எழுந்து இன்வெர்ட்டருடன் ஏசி இயந்திரத்திற்கு இணைப்பு கொடுத்து விட்டுத் துாங்கியுள்ளார். அதிகாலை 5 மணிக்கு, டிரான்ஸ்பார்மர் பழுது சரி செய்யப்பட்டு மின்சார இணைப்பு  கொடுக்கப்பட்டுள்ளது

ஆனால் சரவணன் குடும்பத்தினர் இதை உணராமல் துாங்கியுள்ளனர். அப்போது தான், ஏசி இயந்திரத்தில் இருந்து வாயு கசிந்துள்ளது. அதில் மூச்சுத் திணறி மூவரும் உயிரிழந்துள்ளனர்

காலை எட்டரை மணி வரை சரவணன் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தபோதுதான் நடந்த விபரீதம் வெளியில் தெரியவந்துள்ளது

தகவல் அறிந்த போலீசார், சரவணன் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் ஏசி மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்து சோதனை செய்தபோது, வாயுக் கசிவால் தான் மூவருக்கும் மரணம் நேர்ந்தது என்பதை உறுதி செய்தனர். மூவரின் உடல்களும் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஏசி இயந்திரத்தை வீட்டில் பொருத்துவதோடு பணி முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால் அதைப் பராமரிப்பதில் தான் நமது பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது

இதுபோன்ற விபத்துகள் நேரிடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது, குடும்பத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

First published:

Tags: AC gas Leak Accident, Air conditioner