தமிழக கோவில்களில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை

கோவில்(மாதிரிப் படம்)

ஆடி கிருத்திகை அன்று கோயில் நிகழ்வுகளில், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஆடி மாத திருவிழாக்களையொட்டி பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து அந்தந்த பகுதி மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்தது. மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆடி மாதத்தில் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக முருகன் மற்றும் அம்மன் கோவில்களில் ஆடி மாதத்தில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    காவிரி


    காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா விமரிசையாக நடைபெறும். இந்த நாளில் காவிரியில் புனிதநீராடி பூஜை செய்வதற்காக ஏராளமான மக்கள் கூடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா அபாயம் இருப்பதால் இந்த நாட்களில் மக்கள் கூடுவதை தடுக்க அரசு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர், ‘ஆகஸ்ட் 2-ம் தேதி திங்கள்கிழமை ஆடி கிருத்திகை விழா, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆடிப்பெருக்கு விழாவிலும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கூடுவார்கள். இந்த நாட்களில் முருகன், அம்மன் கோவில்களில் விழா எடுக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழக கோவில்களில் அனுமதி இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களிலும், அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆடி கிருத்திகையை ஒட்டி, ஆகஸ்டு 2 மற்றும் 3ம் தேதிகளில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும், மக்கள் கூட்டத்தை தடுக்கும் நோக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆகஸ்ட் 4ம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.திருத்தணி கோயில் சிறப்பு பூஜைகள் இணையதளத்திலும், யூடியுப் சேனலிலும் நேரடியாக மாலை ஐந்து மணி அளவில் ஒளிபரப்பப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருத்தணி முருகன் கோவில்


    மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், கள்ளழகர் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்களில் வரும் இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆடி கிருத்திகை அன்று கோயில் நிகழ்வுகளில், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. பேரிகார்டு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில், திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில், மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், அவலூர்பேட்டை சித்தகீரிஸ்வரர் முருகன் திருக்கோயில், கீழ்புத்துப்பட்டு மஞ்சினீஸ்வரர் திருக்கோயில் உட்பட அனைத்து பிரதான திருக்கோயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு 01.08.2021 ஞாயிற்றுக்கிழமை முதல் 03.08.2021 செவ்வாய்க்கிழமை வரை சாமி தரிசனம் செய்வதற்கும் திருவிழாக்கள் நடத்துவதற்கும் அனுமதி கிடையாது என ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

    தஞ்சை பெரிய கோவில்


    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோயில் சுவாமிமலை உள்ளிட்ட கோயில்களும், கல்லணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் நீர்நிலைகளில் நீராடவும், கரைகளில் ஆடிபெருக்கு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: