கோவை போத்தனூர் பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் மீது முன்னாள் ஊழியர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டின். இவர் போத்தனூர் மெயின் ரோட்டில் கடந்த 4 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சிவா, சாரதி, நவீன் ஆகிய 3 பேர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக போதைப் பழக்கத்தில் அடிமையாகி சரிவர ஹோட்டலில் பணியில் ஈடுபடாமல் இருந்தனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த செபாஸ்டின் கடையில் பணிபுரிந்து வந்த சிவா, சாரதி, நவீன் ஆகிய மூவரையும் பணியில் இருந்து வெளியேற்றினார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை செபாஸ்டின் கடையில் வேலை பார்த்துவரும் மற்றொரு நண்பர் வெற்றி என்பவரை சிவாவும், சாரதியும் நேரில் வந்து அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து வெற்றியால் மதுபோதையில் கடைக்கு வந்தபோது வேலை செய்ய முடியவில்லை. அப்போது செபாஸ்டின் வெற்றியிடம் விசாரித்தபோது சிவாவும், சாரதியும் தன்னை கடைக்கு வந்து அழைத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து செபாஸ்டின் சிவாவை செல்போன் மூலம் அழைத்து எதற்காக வெற்றியை அழைத்துச் சென்று மதுவுக்கு அடிமையாக்கி விடுகிறீர்கள் எனப் பேசிய போது வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் தீராத சிவா, சாரதி, நவீன் மற்றும் அவரது நண்பர் மிதுன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை செபாஸ்டின் நடத்திவரும் ஹோட்டலுக்கு மதுபோதையில் வந்து பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கேள்வி எழுப்பிய செபாஸ்டினை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கினர். இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றனர்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் செபாஸ்டினை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Also read... காதல் விவகாரத்தில் பெற்ற மகளை பீர்பாட்டிலால் குத்திய தந்தை கைது
தொடர்ந்து செபாஸ்டின் போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சிவா, சாரதி, நவீன், மிதுன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளர் மீது பணியிலிருந்து நிறுத்தப்பட்ட ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-செய்தியாளர்: ஜெரால்ட் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.