• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெற்றோர்களால் கைவிடப்பட்ட இரண்டு வார குழந்தை அரசு மருத்துவமனை பராமரிப்பில் உயிர் பிழைத்தது!

பெற்றோர்களால் கைவிடப்பட்ட இரண்டு வார குழந்தை அரசு மருத்துவமனை பராமரிப்பில் உயிர் பிழைத்தது!

மாதிரி படம்

மாதிரி படம்

குழந்தைக்கு தற்போது 5 வாரங்கள் ஆகின்றன. 12 வாரங்கள் முடியும்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் மருத்துவர் கமலரத்தினம் கூறுகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிறப்பிலேயே இருதயக் கோளாறு இருப்பதன் காரணமாக பெற்றோர்களால் கைவிடப்பட்ட இரண்டு வார குழந்தை
அரசு மருத்துவமனை பராமரிப்பில் உயிர் பிழைத்தது.

பிறப்பிலேயே இருதயக் கோளாறு இருப்பதன் காரணமாக இரண்டு வார பெண் குழந்தையை வேண்டாம் என்று பெற்றோர்கள் கைவிட்ட நிலையில் அந்த குழந்தையை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை தனது பராமரிப்பில் வைத்துள்ளது.

தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் வழங்கி மருத்துவர்களும் செவிலியர்களும் அந்த குழந்தையை பராமரித்து அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிதம்பரத்தை சேர்ந்த தம்பதியினருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் மாதம் 26ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. 2 கிலோ எடையுடன் பிறந்த அந்தப் பெண் குழந்தைக்கு இருதயத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு ஜூலை 2ஆம் தேதி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

அந்த குழந்தைக்கு ஆக்சிஜனுடன் கூடிய ரத்தமும் ஆக்சிஜன் இல்லாத ரத்தமும் ஒன்றாக கலந்து இருதயத்திலிருந்து வெளியேறுகிறது. இதனால் ஆக்சிஜன் அளவு 70 முதல் 80 என்ற நிலையிலேயே அந்த குழந்தைக்கு இருந்து வருகிறது.

ஏற்கனவே இரண்டு குழந்தைகள் கொண்டிருக்கும் அந்த தம்பதியினர் பிறவியிலேயே இருதய கோளாறு உடன் அதுவும் பெண்ணாக பிறந்திருக்கும் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என்று முடிவு செய்தனர். குழந்தையின் சிகிச்சையை நிறுத்தி டிஸ்சார்ஜ் செய்யுமாறு மருத்துவர்களிடம் கேட்டனர். சிகிச்சையை நிறுத்தினால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் குழந்தை தங்களுக்கு வேண்டாம் என அதிகாரபூர்வமாக பெற்றோர்கள் எழுதி கொடுத்து விட்டனர். கடந்த இரண்டு வாரங்களாக அந்த குழந்தை அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பராமரிப்பில் இருந்து வருகிறது.

இதுபோன்று கைவிடப்படும் குழந்தைகளை அரசின் பராமரிப்பில் ஒப்படைக்கலாம். குழந்தை நல குழுவில் இந்த குழந்தையின் விவரத்தை மருத்துவமனை தெரிவித்த பிறகு அரசு இல்லத்தில் குழந்தையை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

Also read... ‘30 வருஷம் சமையல் வேலை செஞ்சு சேத்து வச்ச காசுப்பா... 5 நிமிஷத்துல பறிச்சிட்டு போயிட்டாங்க...’

குழந்தைக்கு தற்போது 5 வாரங்கள் ஆகின்றன. 12 வாரங்கள் முடியும்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் மருத்துவர் கமலரத்தினம் கூறுகிறார். மேலும் "பெற்றோர்கள் குழந்தையை பராமரிக்க தயாராக இல்லாத காரணத்தல் தற்போது மருத்துவமனையிலேயே பார்த்துக் கொள்கிறோம். தாய்ப்பால் வங்கியின் மூலம் குழந்தைக்கு குழாய் வழியாக தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது. பிறக்கும்போது 2 கிலோ எடை கொண்ட குழந்தை நோயின் காரணமாக 1.6 கிலோவாக எடை குறைந்தது. தற்போது தாய்ப்பால் வழங்கப்பட்டு 1.8 கிலோவாக எடை உயர்ந்துள்ளது.

குழந்தையின் உடல் நிலை சீரான பிறகு அரசு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோன்று உணவு குழாயில் அடைப்பு காரணமாக உடல்நிலை மிகவும் மோசமாக பிறந்த இரண்டு வார குழந்தையை பெற்றோர்கள் கைவிட்டுச் சென்றனர். அந்த குழந்தைக்கு சிகிச்சை வழங்கி உடல்நிலை சீராக இருப்பதால் அரசு இல்லத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்று கூறினார்.

உலக தாய்ப்பாலூட்டும் விழிப்புணர்வு வாரத்தில் தாய் இல்லாத குழந்தை தாய்ப்பால் வங்கி மூலம் பயனடைந்துள்ளது தாய்ப்பால் வங்கிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. எழும்பூர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் தாய்ப்பால் வங்கியில் தாய்மார்கள் பலர் தாய்ப்பால் தானம் அளித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் நேரில் வர இயலாதவர்களின் வீடுகளுக்கே சென்று தாய்ப்பால் சேகரித்து வங்கிக்கு கொண்டு வரும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தன் குழந்தைக்கு காய்ச்சல் என எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள ஆவடியை சேர்ந்த பிஸ்கட் தொழிலாளியின் மனைவி கவுசி அங்குள்ள வங்கியில் தாய்ப்பால் தானம் அளித்து வருகிறார். " தாய்ப்பால் தானம் அளிப்பதால் தாய்ப்பால் குறையாது. தாய்மார்கள் இல்லாத பல குழந்தைகளுக்கு தானமாக அளிக்கும் பால் உயிரை காப்பாற்றும்" என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: