Home /News /tamil-nadu /

தாய், தந்தை என்றில்லாமல் பெற்றோர் என அங்கீகரிக்க வேண்டும்... திருநம்பியின் சட்டப்போராட்டம்!

தாய், தந்தை என்றில்லாமல் பெற்றோர் என அங்கீகரிக்க வேண்டும்... திருநம்பியின் சட்டப்போராட்டம்!

மாதிரி படம்

மாதிரி படம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தான் திருமணம் செய்து கொண்ட இணையரிடம் தான் ஆணாக உணர்வதாக கூறியுள்ளார். முதலில் அதை புறம்தள்ளிய அவரது இணையர், பிறகு தருண் கூறுவதை புரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

  • News18
  • Last Updated :
தான் பெற்றெடுத்த இரு குழந்தைகளின் பெற்றோர் என கடவுச்சீட்டில் தன் பெயர் இடம் பெற வேண்டும் என திருநம்பி தருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

42 வயதாகும் தருண், பிறப்பால் பெண்ணாக குறியிட்டு, தற்போது தன்னை ஆணாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தான் திருமணம் செய்து கொண்ட இணையரிடம் தான் ஆணாக உணர்வதாக கூறியுள்ளார். முதலில் அதை புறம்தள்ளிய அவரது இணையர், பிறகு தருண் கூறுவதை புரிந்து கொள்ள ஆரம்பித்தார். ஒரு மன நல ஆலோசகரின் உதவியுடன் தருண் தனக்குள் ஏற்பட்ட பாலின முரண்பாட்டு மன உளைச்சலை புரிந்து கொள்ளவும் அதை கையாளவும் கற்றுக் கொண்டார்.

தன் அடையாளத்தை பற்றிய முழுமையான புரிதலும் ஏற்பும் இல்லாத வயதில் அவர் குடும்பத்தின் வற்புறுத்தல் காரணமாக திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண உறவின் மூலம் தருணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

"என்னுள் ஒரு உயிர் வளர்கிறது என்பது எனக்கு சந்தோசமான அனுபவமாக இருந்தது. எனினும் நான் என்னை ஆணாகவே உணர்ந்து வந்தேன்" என்கிறார் தருண்.

"என் அடையாளத்தை வெளிப்படுத்த முடிவு செய்த போது, என் பிள்ளைகளிடம் நான் அவர்களின் 'அம்மா' அல்ல 'அப்பா' என்று கூறினேன். பெரிய பிள்ளை புரிந்து கொள்ள கொஞ்ச காலம் எடுத்தது. தற்போது இருவருமே என்னை 'அப்பா' வென்றே அழைக்கின்றனர். அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது" என்கிறார் தருண்.

"நான் பாலின உறுதி அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள முடிவு செய்த போது என் இணையரும் என் குழந்தைகளும் உறுதுணையாக நின்றனர். நான் அறுவை சிகிச்சைக்காக மகாராஷ்ட்ரா சென்ற போது மூவரும் என்னுடன் வந்தனர். சிகிச்சை முடித்து வீடு திரும்பிய போது, என் பிள்ளைகள் எனக்கு சாப்பாடு ஊட்டி விட்டு, படுக்கையிலிருந்து எழுந்திருக்க உதவி செய்து அன்பாக கவனித்துக் கொண்டனர்."

விவாகரத்து பெற்றுள்ள தருண் தன் இணையருடன் நல்ல நண்பராக இருந்து வருகிறார்.

தருண் மிக இளம் வயதிலேயே தன்னை ஆணாக உணர ஆரம்பித்துள்ளார். பள்ளி நாட்களில் பெண்களின் கழிப்பறையை பயன்படுத்துவது மிகவும் மன வேதனை அளிக்கும் அனுபவமாக அவருக்கு இருந்துள்ளது. எனவே சில காலம் கழிப்பறையே பயன்படுத்தாமல் அதன் காரணமாக உடல் உபாதைகள் ஏற்பட்டு பள்ளி செல்வது ஓராண்டுக்கு மேலாக தடைப்பட்டுள்ளது. " எனக்கு பெண் ஆடைகள் போட விருப்பமில்லாததால் எப்போதும் விளையாட்டு மைதானத்தில் இருப்பேன். அப்போது தான் எந்த கேள்வியும் இல்லாமல் ஷார்ட்ஸ், டி ஷ்ர்ட் அணிந்து கொள்ளலாம்" என்கிறார் தருண்.

அவரது தாய் தருணுக்கு என்ன நடக்கிறது என புரிந்து கொள்ளவில்லை. தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள போவதாக கூறிய போது அதை சமூகம் ஏற்றுக் கொள்ளாது என கூறிவிட்டார்.

"நான் படிப்பில் சிறந்து விளங்கினேன். அதிலும் கணக்கு மற்றும் அறிவியல் மிக பிடித்த பாடங்கள். எனவே என்னிடம் பாடம் கற்றுக் கொள்ள எப்போதும் சிலர் வருவார்கள். நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது மட்டுமே என் இலக்காக இருந்ததால் வீட்டில் எவ்வளவு துன்பம் நேரினும் அதை தாங்கிக் கொண்டேன்" என்று விவரிக்கிறார் தருண்.

மைக்ரோபயாலஜியில் இளங்கலை மற்றும் மனநல ஆலோசனையில் முதுகலை பட்டம் பெற்று தற்போது LGBTQ உறுதியளிக்கும் ஆலோசகர் ( affirmative counsellor) ஆக உள்ளார்.

Also read... புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு...!

தன்னை ஒரு திருநம்பி என்று கூற விரும்பாத தருண் தன்னை ஆண் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

"பிள்ளைகளின் கடவுச்சீட்டில் தந்தை என்று எனது இணையரின் பெயரும் தாய் என்று எனது குடும்பத்தினரால் எனக்கு வழங்கப்பட்ட பெயரும் உள்ளன. எனவே கடவுச்சீட்டில் தாய் அல்லது தந்தை என குறிப்பிடாமல் 'பெற்றோர்' என இரண்டு பேர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும். இது எனக்காக மட்டும் நான் கேட்கவில்லை. LGBTQ சமூகத்தினர் அனைவருக்காகவும் கேட்கிறேன். LGBTQ சமூகத்தினருக்கு பெற்றோராக இருக்கும் உரிமையை பற்றி யாரும் பேசுவதே இல்லை. என்னை போன்ற பலர் பிள்ளைகள் கொண்டுள்ளனர். இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்தால் அது LGBTQ சமூகத்தினர் அனைவரும் கொண்டாடக்கூடிய தீர்ப்பாக இருக்கும் " என்கிறார் தருண்.

இது குறித்து தருணின் வழக்கறிஞர் அருண் காசி கூறுகையில், "கனடா, ஆஸ்திரேலேயா உள்ளிட்ட நாடுகளில் 'பெற்றோர்1' 'பெற்றோர்2' என்று கடவுச்சீட்டில் குறிபிடுகின்றனர். சட்டங்கள் அனைத்தும் தற்போது gender neutral ஆக மாறி வருகின்றன. இந்த வழக்கில் சாதகமான பதில் கிடைத்தால், கழிப்பறை, பொது இடங்கள் என எல்லாவற்றையும் பாலின சமத்துவமாக கோர வழி செய்யும்" என்று கூறுகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Transgender

அடுத்த செய்தி