புதுச்சேரியில் பாஜக மேலிட பொறுப்பாளருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ திடீர் சந்திப்பால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கான பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நிர்மல்குமார் குரானா நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் பா.ஜ.,வினர் நடத்திய 72 மணி நேர போராட்டத்தை முடித்து வைப்பதற்காக நிர்மல்குமார் குரானா புதுச்சேரிக்கு வந்தார். அவரை கூட்டணி கட்சிகளான என்.ஆர். காங்., தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி மேற்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.
அதே நேரத்தில் அவரை ஆளுங்காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஜான்குமார் சந்தித்து இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதுகுறித்து, ஜான்குமார் எம்.எல்.ஏ.,விடம் கேட்டபோது, மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார். மேலும் பிரதமர் மோடி,குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு ஆகியோர் வந்தபோது அவர்களை வரவேற்ற போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு பதிவில் இருக்கும் இவர்களை இவர் சந்திப்பது தவறு இல்லை. ஆனால் புதுச்சேரியின் பாஜக பொறுப்பாளரை ரகசியமாக சந்தித்தது தவறு என காங்கிரசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக ஜான்குமார் தரப்பில் கேட்ட போது, விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இது பற்றி பாஜக துணைத்தலைவர் ஏம்பலம் செல்வத்திடம் கேட்ட போது, வரும் சட்டமன்றத்தேர்தலில் பாஜகவில் போட்டியிட பலரும் விருப்பம் தெரிவிக்கிறார்கள். விரைவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.
2021 ல் புதுச்சேரியில் தாமரை மலரும் என்றும் அவர் உறுதியாக கூறினார். ஜான்குமார் உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பாஜகவில் விரைவில் இணைய உள்ளனர். இதற்கு ஏற்ப பாஜகவின் தேசிய தலைவர் நட்டா வரும் 30 ம் தேதி புதுச்சேரிக்கு வர திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் கடந்த தேர்தலை போல் புதுச்சேரியில் பாஜக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் இக்கூட்டணி 12 இடங்களை பிடித்தால் மத்திய அரசு 3 நியமன எம்எல்ஏக்களை நேரடியாக நியமித்தால் இக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும்.
Also read... கமல்ஹாசன் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் 13-ல் தொடங்குகிறார்
இதுவே பாஜகவின் கணக்கு, இதனால் குறைந்தது 12 இடங்களை பிடிக்க இக்கூட்டணி தீவிரம் காட்டுகிறது. ஜான்குமார் வசம் இரண்டு தொகுதிகள் உள்ளன. ஒன்று முதல்வரின் நெல்லித்தோப்பு தொகுதி, இரண்டாவது இடைத்தேர்தலில் ஜான்குமார் வெற்றி பெற்ற காமராஜ் நகர் தொகுதி. இதனால் ஜான்குமார் மீது பாஜக, திமுக, என்.ஆர்.காங் உட்பட அரசியல் கட்சிகளின் கவனம் செல்கிறது என்பது குறிப்பிடதக்கது.
"இந்த தொகுதிகளுடன் 3-வது ஒரு தொகுதியும் தன்வசம் இருக்கிறது. இந்த மூன்றிலும் வெற்றி பெற்று தருவேன். எனக்கு அமைச்சர் பதவி தரவேண்டும்" என்பதே ஜான்குமாரின் நிபந்தனை. இதற்கு ஒப்பு கொள்ளும் கட்சியில் அவர் விரைவில் இணைவார் என தெரிகிறது.