ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆதரவற்றோர்களுக்கு என பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற நோயாளிகள் பலர் 108 ஆம்புலன்ஸ் அல்லது வேறு யாராவது மூலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கு சிகிச்சை முடிந்த பிறகும் கூட திரும்பி செல்ல இடம் இல்லாததால் வருட கணக்கில் அவர்களுக்கு மருத்துவ சேவை மற்றும் ஆதரவு அளித்து வருகின்றனர் மருத்துவமனை ஊழியர்கள்.
இவர்களின் நிலை குறித்து கடந்த அக்டோபர் மாதம் நியூஸ்18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டிருந்தது. அதன் பிறகு உடல் தகுதியானவர்களை மாற்றுத் திறனாளிகள் நல ஆணையம் இல்லங்கள் மாற்ற முன் வந்தது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் அமைப்புகளும் நியூஸ் 18 செய்தியை பார்த்து அவர்களுக்கு தேவையான அடல்ட் டயபர் உள்ளிட்டவை வழங்கி உதவினர்.
இந்நிலையில் ஆதரவற்ற நோயாளிகளுக்கு என தனி வார்டு தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு வார்டுகளில் இருந்த அவர்கள் தற்போது இந்த பிரத்யேக வார்டில் தங்கவைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு என பிரத்யேக செவிலியர் முழு நேர கண்காணிப்பில் இருப்பார்கள்.
பொது வார்டுகளில் இருக்கும்போது மற்ற நோயாளிகளின் உறவினர்கள் வருகை அவர்களுக்கு ஒரு ஏக்கத்தை தரும். ஆனால் அப்படி ஏதும் இல்லாமல் இந்த வார்டில் பிரத்யேக கவனிப்புடன் அவர்கள் இருக்கிறார்கள். இந்த வார்டில் பணிசெய்ய எங்களுக்கும் பெருமையாக உள்ளது.
திருத்தணியில் டீக்கடையில் பணிபுரிந்து வந்தேன். கொரோனா காரணமாக வேலை இழந்தேன். உடல்நிலை சரியில்லாமல் போனதால் யாரோ தெரியாத நபர் என்னை மருத்துவமனையில் சேர்த்து விட்டார். சொந்த ஊர் மதுரையை விட்டு வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. குடும்பம் என கூறிக்கொள்ள யாரும் இல்லாத என்னை இங்கே நல்லபடியாக கவனித்து கொள்கின்றனர். ஆதரவற்றவர்களுக்கு மருத்துவ சேவை மட்டுமல்லாமல் அன்பும் ஆதரவும் அளித்து வருகிறது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை.