எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

கோப்புப் படம்

பிரிட்டிஷ், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்று வந்த வகையில் டிக்கெட் கட்டணமாக 7,82,124 ரூபாய் மோசடியாக பல்கலைக்கழகத்தில் இருந்து மீர் முஸ்தபா உசைன் பெற்றுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  விமான பயண டிக்கெட் மோசடி வழக்கில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை துணைவேந்தராக பணியாற்றியவர் மீர் முஸ்தபா உசைன். இவர், துணைவேந்தராக பணியில் இருந்த போது 2008 மே மாதம் வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் விமானத்தில் சென்றுள்ளார்.

  இதற்காக உயர்வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு விமான கட்டணமாக 2,99,673 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இதன்பின்பு, இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு சாதாரண இருக்கையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மீர் முஸ்தபா உசைன் சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டில் பயணம் செய்து விட்டு உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாக கூறி மோசடியாக 2,22,332 ரூபாய் பணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாக பெற்றுள்ளார்.

  Also read... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 395 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு  இதேபோன்று பிரிட்டிஷ், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்று வந்த வகையில் டிக்கெட் கட்டணமாக 7,82,124 ரூபாய் மோசடியாக பல்கலைக்கழகத்தில் இருந்து மீர் முஸ்தபா உசைன் பெற்றுள்ளார்.

  இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி மீர் முஸ்தபா உசைன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 24,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: