ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம்

டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில், சென்னை குடிநீர் வாரிய நீர் நிரப்பு நிலையங்களிலிருந்து லாரிகள் மூலம் குடிநீரைப் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 

  சட்டவிரோதமான முறையில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 3-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், வணிக பயன்பாட்டிற்கு நிலத்தடி நீரை உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

  நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும் என்றும், கனிமவளப் பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 4,100 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

  இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரிகளுடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். அப்போது, தனியார் லாரிகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.

  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாதிப்புக்குள்ளான நுகர்வோர், தங்களது லாரிகள் அல்லது அவர்களது அங்கீகாரம் பெற்ற லாரிகளுக்கு சென்னை குடிநீர் வாரிய லாரி நீர்நிரப்பு நிலையங்களிலிருந்து இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை குடிநீர் வழங்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த வசதியைப் பெற, சென்னை குடிநீர் வாரியத்திற்கு முறையான விண்ணப்பத்துடன் குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்குத் தேவையான குடிநீர் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒரு லாரிக்கு இரண்டு நடைகள் வீதம் பெற்றுக் கொள்ளலாம் என்றும், கூடுதல் நீர் தேவைப்பட்டால், முறையாக பரிசீலிக்கப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Lorry owners strike, Rural Development Minister sp Velumani, Tanker lorry strike, Water scarcity in city