Home /News /tamil-nadu /

வாஜ்பாயே காலில் விழுந்து ஆசி வாங்கிய மதுரை சின்னப்பிள்ளை...!

வாஜ்பாயே காலில் விழுந்து ஆசி வாங்கிய மதுரை சின்னப்பிள்ளை...!

மதுரை சின்னப்பிள்ளை

மதுரை சின்னப்பிள்ளை

சிறுசேமிப்புத் திட்டத்தைத் தனி ஒரு ஆளாக வெற்றிகரமாகச் செயல்படுத்திய சின்னப்பிள்ளைக்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய் சக்தி புரஷ்கார் விருது வழங்கினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சின்னப்பிள்ளைக்கு உயரிய பத்ம ஸ்ரீ விருது குடியரசுத் தலைவரல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளந்திரி என்னும் கிராமத்தில் பிறந்தவர் சின்னப்பிள்ளை. 12 வயதில் திருமணம் ஆன சின்னப்பிள்ளைக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். சிறு வயதிலேயே உடல் நிலை சரியில்லாத கணவரையும் 2 குழந்தைகளையும் காப்பாற்ற கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

கூலி வேலையைப் பார்த்துக்கொண்டு தன் வீடு தன் பிள்ளைகள் என இருக்காமல், தன் உடன் வேலை செய்யும் பெண்களின் பிரச்னைகளையும் முன்னின்று தீர உதவியுள்ளார். வேலை பார்த்து சம்பாதிக்கும் காசை சேமித்து வருவது எப்படி என தன் கிராமத்துக்கே கற்றுக்கொடுத்தார். மனைவியின் உழைப்புப் பணத்தையும் தான் சம்பாதிக்கும் பணத்தையும் மதுவில் செலவிடும் ஆண்களை ஊர்ப் பெரிய மனுஷியாக தேடிச் சென்று திருத்தி நல்வழிப்படுத்தி வந்துள்ளார் சின்னப்பிள்ளை.

தன் ஊரோடு மட்டும் நின்றுவிடாத சின்னப்பிள்ளை ‘களஞ்சியம்’ என்னும் மகளிர் சுய உதவிக்குழு ஒன்றைத் தொடங்கி இன்று நாடு முழுவதும் உள்ள பல கிராம மக்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டு கிராமங்களின் சிறுசேமிப்புத் திட்டத்தைத் தனி ஒரு ஆளாக வெற்றிகரமாகச் செயல்படுத்திய சின்னப்பிள்ளைக்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய் சக்தி புரஷ்கார் விருது வழங்கினார்.

தன்னைவிட வயதில் இளையவரான சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வாஜ்பாய் ஆசிர்வாதம் வாங்க, உலக அளவில் பிரபலமானார் சின்னப்பிள்ளை. இன்று தள்ளாத வயதிலும் நாடு முழுவதும் உள்ள பல கிராமங்களுக்கும் சென்று குடிபோதையில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டெடுப்பதும் கந்துவட்டிக் கொடுமையை ஒழிப்பதும் முழுநேரப் பணியாகச் செய்து வருகிறார் சின்னப்பிள்ளை.

முதுமை, உடல்நலம், கல்வி என எந்தவொரு எல்லைகளையும் தன் மீது திணித்துக்கொள்ளாது சமூகத்துக்காக இன்றளவும் பணியாற்றி வரும் சின்னப்பிள்ளைக்கு 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி: மதுரை சின்னப்பிள்ளை
Published by:Rahini M
First published:

Tags: Madurai, Madurai Chinnapillai, Padma Shri

அடுத்த செய்தி