ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வடிவேலு காமெடி பாணியில் தண்ணீரில் பதுங்கி போலீசாருக்கு தண்ணி காட்டிய கொள்ளையன் கைது!

வடிவேலு காமெடி பாணியில் தண்ணீரில் பதுங்கி போலீசாருக்கு தண்ணி காட்டிய கொள்ளையன் கைது!

போலீசாருக்கு தண்ணீர் காட்டிய பாஸ்கர்

போலீசாருக்கு தண்ணீர் காட்டிய பாஸ்கர்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  நெல்லை போலீசாருக்கு நீண்ட நாட்களாக தண்ணி காட்டி வந்த கொள்ளையன், தண்ணீருக்குள் பதுங்கிக்கொண்டு போலீசாரை சுத்தலில் விட்ட சம்பவம் நடந்துள்ளது.

  நெல்லை பேட்டையைச் சேர்ந்தவர் 30 வயதான பாஸ்கர். இவர் மீது 60க்கும் மேற்பட்ட கொள்ளை வழிப்பறி வழக்குகள் நெல்லை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

  20க்கும் மேற்பட்ட வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ள நிலையில் தொடர்ந்து அவர், போலீசாரிடம் அகப்படாமல் தண்ணி காட்டி வந்தார்.

  இந்த நிலையில் அவர் கோபாலசமுத்திரம் பகுதியில் சுற்றி வருவதாக வந்த தகவலையடுத்து முன்னீர்பள்ளம் காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி தலைமையிலான போலீசார் அந்த இடத்துக்கு சென்று பாஸ்கரை கைது செய்ய முயற்சித்தனர்.

  போலீசார் வருவதைக் கண்ட அவர் தாமிரபரணி ஆற்றில் நீந்திக் கரையேறி தப்பினார். இந்த நிலையில் அருகிலுள்ள சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த ஆய்வாளர் சீதாலட்சுமி, அவர்களை எதிர் கரைக்கு வரவழைத்தார்.

  இருபக்கமும் போலீசார் வந்ததை அடுத்து அருகில் உள்ள குளத்தில் உள்ள புதிது நடுவில் உள்ள மணல் திட்டில் பாஸ்கர் தஞ்சமடைந்தார். காவலர்கள் கரைக்கு வரச் சொல்லி வலியுறுத்தியும் அவர் வர மறுத்து விட்டதாக தெரிகிறது.

  இதனையடுத்து காவலர்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் படகில் சென்று குளத்தின் நடுவில் இருந்த கொள்ளையரை கைது செய்து அழைத்து வந்தனர்.

  கைது செய்ய முயற்சிக்கும் போது கொள்ளையர் பாஸ்கர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல்துறையினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

  அதில் ஒரு காவலருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சக போலீசார் அனுமதித்தனர்.

  கைது செய்யப்பட்டுள்ள பாஸ்கரை முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நெடு நாட்களாக போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த குற்றவாளி, தண்ணீருக்குள் மறைந்து தப்பி ஓட முயற்சித்த நிலையில், படகில் சென்று பிடித்த சம்பவம் நெல்லை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Tirunelveli