இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. மேலும், அதிமுக-வினர் அளித்த கடிதங்கள் குறித்து சபாநாயகர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அண்மையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்றும், நாளையும் அவையை நடத்த முடிவுசெய்யப்பட்டது.இதன்படி, இன்று காலை 10 மணிக்கு அவை கூடியதும், வினா-விடை நேரம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்து பேச உள்ளார். இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தபிறகு, தீர்மானம் நிறைவேற்றப்படும்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து 5 ஆண்டுகளாக விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையும் படிக்க : ரூ.16ஆயிரம் கோடி! பாரத் பெயரில் யூரியா, டிஏபி! ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை தொடங்கிய பிரதமர்!
அதிமுக-வில் பிளவு ஏற்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் மட்டுமே நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. அதிமுக-வின் பொன்விழா கொண்டாட்டங்கள் காரணமாகவே, முதல் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும், இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் அதிமுக துணைத் தலைவர் பதவி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இருதரப்பும் மனுக்களை அளித்துள்ளன. இது தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுக உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு தொடர்பாகவும் சபாநாயகர் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதனால், இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK MLA, Imposing Hindi, Tamil News, TN Assembly