சிபிஎஸ்இ கல்வி முறையில் பயிலும் 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் முதலாம் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 11ம் தேதி நடைபெற்ற 10ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில், பெண் வெறுப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் ஒரு வினாவாக கேட்கப்பட்டிருந்தது கண்டனத்தை பெற்றுள்ளது. அந்த வினாவில் பிற்போக்கான பெண் வெறுப்பு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் இடம்பெற்றது அனைவரது கண்டனத்தையும் பெற்றுள்ளது.
அந்த சர்ச்சைக்குரிய கேள்வி ஒரு பெரிய சொற்றொடராக இடம்பெற்றிருந்தது. அந்த வாக்கியத்தில், மனைவிகள் தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திவிட்டார்கள். அதுவே குழந்தைகள் மற்றும் வேலைக்காரர்கள் ஒழுக்கமின்மைக்கு முக்கியக் காரணம். மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை அழித்துவிட்டது. பெண் விடுதலை குழந்தைகளிடையே ஒழுக்கமின்மைக்கு வழிவகுத்தது. சமூக பிரச்சினைகளுக்கு பெண்களின் விடுதலை தான் காரணம். மேலும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன.
அந்த கேள்விக்கான விடைகளுள் ஒன்றாக, ‘எழுத்தாளர் ஒரு ஆண் பேரினவாத நபர்’ என்று கொடுக்கப்பட்டிருந்தது. இன்னொரு விடையாக எழுத்தாளர் வாழ்க்கையை இலகுவாக அணுகுகிறார் என்ற விடை கொடுக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் இவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுகொள்ளப்பட்டிருந்தனர்.
இத்தகைய கருத்துக்கள் பள்ளி மாணவர்களின் கேள்வித்தாளில் கேட்கப்பட்டிருந்தது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சி.பி.எஸ்.இ 10ம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
வளர் இளம் பருவத்தில் (Teenage) இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்? பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை பொறுப்போடு செய்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Also read: சிபிஎஸ்இ தேர்வில் பெண்களுக்கு எதிரான கருத்துகள்: வலுக்கும் கண்டனம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TTV Dinakaran