கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு

கொரோனா பரவல் காரணமாக தற்போது கட்சி ஆரம்பிக்கவில்லை என நடிகர் ரஜினி கூறியதைப் போல, அவர் பெயரில் சமூக வலைதளங்களில் உலா வரும் அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
நடிகர் ரஜினிகாந்த்
  • Share this:
ரஜினிகாந்த் அரசியலுக்கு இப்போது வருவார்... அப்போது வருவார் என பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்து கிடந்த நிலையில், 2017ஆம் ஆண்டு டிசம்பரில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது உரையாற்றிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் போர் வரும்போது களம் காணுவோம் என்றும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றத்தின் பெயர், ரஜினி மக்கள் மன்றம் என மாற்றப்பட்டது. ஓரிருமுறை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினி, தற்போது வரை கட்சி தொடங்கவில்லை. நவம்பர் மாதம் ரஜினி கட்சி தொடங்குகிறார் என்றும், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார் என்றும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், அரசியல் கட்சி குறித்து ரஜினி எழுதியது போன்ற ஒரு அறிக்கை சமூகவலைதளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது. அதில், என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன் என ரஜினி பெயரில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்னையால் , அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த இயலவில்லை என கூறப்பட்டுள்ளதோடு,  அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் அரசியல் பிரவேசம் பற்றி ஆலோசனை கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனாவுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும், அந்தத் தடுப்பூசியை உங்களுக்குச் செலுத்தினால் உங்கள் உடல் அதை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும் என மருத்துவர்கள் கூறியதாகவும், இப்போது 70 வயது என்பதோடு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம் என்றும், எனவே மக்களை தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாக மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும், ரஜினி பெயரில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனக்கு உயிர் பற்றிய கவலை இல்லை. தன்னை நம்பி வருவோரின் நலன் குறித்துத்தான் கவலை என்பதால், மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் தனது உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தான் அரசியலுக்கு வருவேன் என ஆதரிப்போர் அதிகரித்து வரும் சூழலில், ஒருவேளை அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால், அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்பதோடு, முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும், இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றும் கூறப்படுட்டுள்ளது. எனவே, அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, ரசிகர்களும், மக்களும் என்ன முடிவு எடுக்கச் சொன்னாலும், அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினி இதுவரை எதுவும் சொல்லாத நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading