வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே ஊராட்சி செயலாளர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாயனி குப்பத்தில் கிராம ஊராட்சி செயலராக 13 ஆண்டுகளாக பணியாற்றியவர் அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர். இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், யாகேஷ் என்ற 2 வயது மகனும் உள்ளனர்.
இவர் தனது தம்பி பிரவீன்குமாருக்கு நியாயவிலை கடையில் வேலை பெற்றுத்தர முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்காக அணைக்கட்டு ஒன்றிய கவுன்சிலரும் திமுக பிரமுகருமான ஹரியிடம் இரண்டரை லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து 6 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை வேலையும் வாங்கித்தரவில்லை பணத்தையும் திரும்பத் தரவில்லை.
மேலும் ஊராட்சி டெண்டர் பணிகளில் கமிஷன் கேட்டு ராஜசேகருக்கு ஹரி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதனிடையே, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் 12 லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக ராஜசேகர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ராஜசேகரிடம் கடந்த வாரம் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ராஜசேகர், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Also read... பெண் மீது ஆசிட் வீசிவிட்டு சாமியார் வேடத்தில் தலைமறைவு.. தப்ப முயன்றபோது போலீஸ் துப்பாக்கிச்சூடு
முன்னதாக கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர், தனது இறப்புக்கு கவுன்சிலர் ஹரி தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹரியை கைது செய்ய வலியுறுத்தி, ராஜசேகரின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-செய்தியாளர்: செல்வம். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.