மதுரையில் தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால் வடமாநில இளைஞர் ஒருவர் தோல் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளார்.
மதுரை தெற்கு வாசல் பகுதியில், கொல்கத்தாவை சேர்ந்த 28 வயதான பிஸ்வாஜீட் மாண்டல் என்ற இளைஞர் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். எழுத்தாணி கார தெருவில் நண்பர்களுடன் வசித்து வரும் இவர், தெற்குஆவணி மூலவீதி பகுதியில் உள்ள நகை பட்டறைகளில் நகை வடிவமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக, தெற்குவாசல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவனையை அணுகிய நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கட்டுபோடவேண்டும் என கூறியதால் இளைஞர் கட்டுப் போட்டு கொண்டுள்ளார்.
பின்னர், சில நாட்கள் கழித்து கைக்கட்டை அவிழ்த்து பார்த்த போது கைவிரலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. உடனே, தெற்கு வாசல் பகுதியில் உள்ள தோல் மருத்துவரை அணுகி உள்ளார். அங்கு அவருக்கு கொடுத்த அலர்ஜி மருந்தை உட்கொண்ட போது, மேலும் உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உள்ளது.
இதனால், மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அணுகி நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல பரிந்துரை செய்தனர்.
அதனை தொடர்ந்து, மதுரை மேலமடை பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அங்கு அவருக்கு அலர்ஜி குணமாக தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Also read... Tamil Nadu Budget 2021 : அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்படும் - ஓ.பி.எஸ்!
ஒருவார காலமாக என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன, ஏன் இவ்வாறான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று தெரியாமல் இருந்து வருவதாக கூறிய அந்த இளைஞர், தற்போது வரையில் மருத்துவ செலவுக்காக சுமார் 2 லட்சம் வரையில் செலவு செய்திருப்பதாகவும், இதுவரையில் எந்த காரணமும் தெரிய வில்லை என்றும் வேதனையான குரலில் தெரிவித்தார்.
மேலும், தனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி வேறு யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும், மருத்துவர்களை நம்பி வருபவர்களுக்கு பொறுப்புடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அந்த வடமாநில இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.